”அனைத்து பிரச்னைகள் குறித்தும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்” - பாக். பிரதமர் அறிவிப்பு
பஹல்காம் தாக்குலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம், பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதையடுத்து எல்லைகளில் தாக்குதலைத் தொடங்கிய பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இந்தியா பதிலடி கொடுத்தது. இதற்கிடையே அமெரிக்கா தலையிட்டதன்பேரில் தாக்குதல் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்தியா யாருடைய தலையீடும் இல்லாமல் முடிவு எடுத்ததாக சொன்னது.
இதற்கிடையே இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். தற்போது அதே கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர், “அமைதிக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. காஷ்மீர், நதிநீர் பிரச்னை உட்பட அனைத்துக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண விரும்புகிறோம். மேலும் வர்த்தகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்து அண்டை நாடுகளுடன் பேசவும் தயாராக இருக்கிறோம். இந்தியா போரின் பாதையைத் தேர்ந்தெடுத்தால், பதில் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக இருக்க தேர்வு செய்தால், எங்கள் பிரதேசத்தை நாங்கள் பாதுகாப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அரசு முறை பயணமாகச் துருக்கிக்குச் சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், அதிபர் தையிப் எர்டோகனைச் சந்தித்துப் பேசியதுடன், இந்தியாவுக்கு எதிரான தாக்குதலின்போது உதவியதற்காக துருக்கி அரசுக்கு நன்றி தெரிவித்தார். இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலின்போது துருக்கியின் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. துருக்கி பயணத்தைத் தொடர்ந்து அவர், தற்போது ஈரானுக்குச் சென்றுள்ளார்.