”இந்தியாவை தோற்கடிச்சு காட்டுறேன்.. இல்லைனா” - சவால் விட்ட பாகிஸ்தான் பிரதமர்!
அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்தத் தேர்தலில் இம்ரான் கானின் பிடிஐ கட்சியின் பெயர், சின்னம் முடக்கப்பட்ட நிலையில், சுயேட்சைகளாக அவரது கட்சியினர் களமிறங்கினர். அப்படியிருந்தாலும் சுமார் 90 இடங்களில் அவர்கள் வென்றனர். இருப்பினும், 3 முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து, கூட்டணி அரசை அமைத்தன. அதன்படி, பாகிஸ்தானின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப், 2வது முறையாக பதவியேற்றார்.
எனினும் அந்நாடு கடந்த சில ஆண்டுகளாக நிதி நெருக்கடி காரணமாகப் பொருளாதாரப் பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் இருமடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும் சர்வதேச அளவில் மிகப்பெரிய கடன் சுமையில் உள்ளது. இதனால் கடனை திருப்பிச் செலுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், “இந்தியாவைத் தோற்கடித்து பாகிஸ்தானை முன்னேற்றுவேன்; இல்லை என்றால் என் பெயரையே மாற்றிக் கொள்வேன்“ என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சவால் விடுத்துள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தேரா காசி கானுக்குச் சென்ற அவர், பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசினார். “பொதுமக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய எனது அரசாங்கம் கடுமையாகப் பாடுபடுகிறது. பாகிஸ்தானின் நிலைமை மேம்படுவதை உறுதிசெய்ய நாங்கள் இரவும் பகலும் உழைப்போம். சர்வவல்லமையுள்ள கடவுள் எப்போதும் பாகிஸ்தானை ஆசீர்வதித்துள்ளார். நான் நவாஸ் ஷெரீப்பின் ரசிகன். அவரது சீடர். இன்று, அவரது ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையின் மீது சத்தியம் செய்கிறேன். அதற்கான ஆற்றலும் விருப்பமும் எனக்கு இருக்கும் நாள் வரை, இந்தியாவைத் தோற்கடித்து பாகிஸ்தானை முன்னேற்றுவேன்; இல்லை என்றால் என் பெயரையே மாற்றிக் கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பொதுவாக, பொதுக்கூட்டங்களில் அமைதியாகப் பேசும் குணம் கொண்ட ஷெபாஸ் ஷெரீப் முதன்முறையாக ஆவேசமாக பேசியிருந்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் விமர்சனத்தை பெற்று வருகிறது. ’இது ஒரு நல்ல காமெடி’, ’இப்போதே நல்ல பெயரை தேர்ந்தெடுத்து வையுங்கள்’ என நெட்டிசன்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக, இந்திய அரசிடம் பேச ஷெபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்தார். பேச்சுவார்த்தை நடக்க வேண்டுமென்றால், பாகிஸ்தான் தனது மண்ணிலிருந்து பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று இந்தியா பலமுறை கூறியுள்ளது. "பேச்சும் பயங்கரவாதமும் கைகோர்த்துச் செல்ல முடியாது" என்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.