”24 மணி நேரத்தில்.. ஈரான் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம்” - பாகிஸ்தான் பிரதமர் கூறுவது என்ன?
அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையே வெடித்துள்ள போர் 100 நாட்களைக் கடந்து நீடித்து வரும் நிலையில், இரு தரப்பிலும் தெளிவான வெற்றியாளர் எவருமின்றி மோதல் தொடர்கிறது. ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் தொடங்கிய இப்போரால் இதுவரை ஈரானில் 3,400க்கும் அதிகமானோரும், லெபனானில் 3,600க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தால் இந்தநாடுகளுக்கு இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும், நிரந்தரமாக போரை கைவிடுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இழுபறியிலேயே இருந்து வருகின்றன. பலமுறை அமைதி பேச்சுவார்த்தை ஒப்பந்தம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இந்தசூழலில் தான், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ”ஈரான் அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இதைவிட நெருக்கமாக நாம் இருந்ததில்லை. அடுத்த 24 மணி நேரத்தில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தொழில்நுட்ப மட்ட பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் நடைபெறும். பேச்சுவார்த்தைகளின் போது தங்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பிற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம், நீடித்த அமைதிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில், சமீப காலங்களில் உலக பொருளாதாரம் மற்றும் எண்ணெய் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அமெரிக்கா-ஈரான் மோதலுக்கு முடிவு கட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

