\
Pakistan ISI Trained Bin Laden, Zawahiri, Ex-Minister Claims
பின்லேடன்Reuters

பின்லேடனுக்கு பயிற்சி அளித்த பாகிஸ்தான்.? நிதியுதவி செய்த அமெரிக்கா.? - வெளியான பின்னணி!!

சோவியத் – ஆப்கன் போரின்போது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு சுமார் ஒரு லட்சம் ஆப்கன் போராளிகளுக்கும் 20 ஆயிரம் அரபு போராளிகளுக்கும் பயிற்சி அளித்ததாக முன்னாள் அமைச்சர் முஷாஹித் ஹுசைன் சையத் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Published on: 

சோவியத் யூனியனுக்கு எதிரான ஆப்கானிஸ்தான் போரின்போது, அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய ஒசாமா பின்லேடன் மற்றும் அய்மான் அல்-சவாஹிரி (Ayman al-Zawahiri) உள்ளிட்டவர்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பயிற்சி அளித்ததாக, பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் முஷாஹித் ஹுசைன் சையத் (Mushahid Hussain Syed) கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முஷாஹித் ஹுசைன் சையத்
முஷாஹித் ஹுசைன் சையத்Face Book

பாகிஸ்தான் முன்னாள் தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த முஷாஹித் ஹுசைன், சமீபத்தில் அளித்த பேட்டியில், 1979 முதல் 1989-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சோவியத் படைகளுக்கு எதிரான போரின்போது சுமார் ஒரு லட்சம் ஆப்கன் போராளிகளுக்கும், 20 ஆயிரம் அரபு போராளிகளுக்கும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பயிற்சி அளித்ததாகக் கூறியுள்ளார். இந்தப் பயிற்சி நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா நிதியுதவி வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, அமெரிக்காவின் சி.ஐ.ஏ. சுமார் 2.1 பில்லியன் டாலர்களையும், சவுதி அரேபியா அதே அளவிலான தொகையையும் வழங்கியதாகவும், பின்னர் மேலும் ஒரு பில்லியன் டாலர் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்தப் போரில் பங்கேற்ற அரபு போராளிகளில் ஒசாமா பின்லேடன் மற்றும் அய்மான் அல்-சவாஹிரியும் இருந்ததாக முஷாஹித் ஹுசைன் குறிப்பிட்டுள்ளார்.

கோப்புபடம்
கோப்புபடம்Reuters

முன்னதாக, 1979 முதல் 1989 வரை நீடித்த சோவியத் ரஷ்யா – ஆப்கன் போரில், அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை சோவியத் படைகளுக்கு எதிரான ஆப்கன் போராளிகளுக்கு பல்வேறு வகைகளில் ஆதரவளித்தன. இந்த உதவிகள் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. வழியாக சென்றதாக அப்போது கூறப்பட்டது. அதேசமயம், இந்தக் காலகட்டத்தில் உருவான போராளிக் குழுக்களுக்கும் பின்னர் உருவான அல்-கொய்தாவுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் பேசப்பட்டது.

மேலும், 9/11 தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட அமெரிக்க விசாரணையில், அல்-கொய்தாவுக்கு சவுதி அரேபியாவைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நன்கொடை வலையமைப்புகள் மூலம் நிதி கிடைத்திருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டாலும், சவுதி அரசு அல்லது உயர்மட்ட அதிகாரிகள் நேரடியாக அல்-கொய்தாவுக்கு நிதியளித்ததற்கான ஆதாரம் கிடைக்கவில்லை என நைன் லெவன் (9/11) ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்தச்சூழலில் தான், முன்னாள் பாகிஸ்தான் அரசியல்வாதி முஷாஹித் ஹுசைன் சையத்-ன் தற்போதைய கூற்று, ஆப்கன் போரின்போது அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஒத்துழைப்பு குறித்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

Pakistan ISI Trained Bin Laden, Zawahiri, Ex-Minister Claims
கண்களுக்கே தெரியாது.. ரூ.5,000 கோடியில் லேசர் ஆயுதங்கள்.. ஈரானை வீழ்த்த களமிறங்கிய அமெரிக்கா!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com