\
US Deploys Laser Weapons In Hormuz
Model Imagereuters

கண்களுக்கே தெரியாது.. ரூ.5,000 கோடியில் லேசர் ஆயுதங்கள்.. ஈரானை வீழ்த்த களமிறங்கிய அமெரிக்கா!

இதனால் ராணுவ வீரர்கள் மிகக் குறைந்த பயிற்சியிலேயே இந்த ஆயுதங்களைக் துல்லியமாக இயக்க முடிகிறது.
Published on: 
Summary

மத்திய கிழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அமெரிக்க ராணுவம் உயர்-ஆற்றல் லேசர் ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளது. இது, மிகத் துல்லியமாகக் கண்காணித்து, விரும்பும் இடத்தில் குறிவைத்து ட்ரோன்களின் சென்சார்களைச் செயலிழக்க வைக்கும் எனக் கூறப்படுகிறது

அணு ஆயுதம் தொடர்பாக ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திவரும் தாக்குதலால் மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் நாளுக்கு நாள் பரபரப்பை எட்டி வருகிறது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. சவூதி அரேபியா, குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை ட்ரோன்களால் தாக்கி அழித்து வருகிறது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கப்பல்கள் மீது, ஈரான் ராணுவம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவும் தற்போது தயாராகி வருகிறது. அந்த வகையில், எதிரி நாடுகளின் ட்ரோன் தாக்குதலில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ளும் வகையில் அமெரிக்க ராணுவம், உயர் ஆற்றல் லேசர்களை தயாரித்து ஹார்முஸ் ஜலசந்தியில் நிலை நிறுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Strait of Hormuz
Strait of Hormuzreuters

அதன்படி, குறைந்த விலையில், அதிக திறனில் சிறப்பாக செயல்படும் லேசர்களை சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பில் அமெரிக்க ராணுவம் தயாரித்துள்ளது. இதன்மூலம், மிகத் துல்லியமாகக் கண்காணித்து, விரும்பும் இடத்தில் குறிவைத்து ட்ரோன்களின் சென்சார்களைச் செயலிழக்க வைக்கும் எனக் கூறப்படுகிறது.

பிரகாசமான ஒளியாக இல்லாமல், மனிதக் கண்களுக்குத் தெரியாத அகச்சிவப்பு கதிர்களை இவை பயன்படுத்துகின்றன. இந்த லேசர்கள், இலக்கின் மீது சில வினாடிகள் தீவிர ஆற்றலைக் குவித்து, அதன் முக்கியமான பாகங்களை உருகவைத்து வெடிக்கச் செய்கின்றன. ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானிய ட்ரோன்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்களை முறியடிப்பதே இதன் முதன்மை நோக்கமாகும். இந்த அதிநவீன லேசர் கருவிகளைக் கட்டுப்படுத்த அமெரிக்க ராணுவம் மாற்றிமைக்கப்பட்ட Xbox கேமிங் கன்ட்ரோலர்களைப் பயன்படுத்துகிறது. இதனால் ராணுவ வீரர்கள் மிகக் குறைந்த பயிற்சியிலேயே இந்த ஆயுதங்களைக் துல்லியமாக இயக்க முடிகிறது.

Model image
Model imagereuters

அமெரிக்க ராணுவம் இந்த லேசர் தொழில்நுட்பத்தை, மெக்சிகன் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராகவும், மத்திய கிழக்கில் உள்ள பல போர்க் கப்பல்களிலும் பயன்படுத்தி இருந்தாலும், அவை இன்னும் மனித இலக்குகள் மீது பயன்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com