வங்கதேசத்திற்கு சென்ற பாகிஸ்தான் உளவுப்பிரிவு தலைவர்.. நெருங்கும் சகோதரர்கள்.. இந்தியா சவால்!
கோபித்துக்கொண்டு பிரிந்த சகோதரர்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேர்ந்தால் எந்தளவுக்கு உணர்ச்சிப்பெருக்கும் நெருக்கமும் இருக்குமோ அதே போன்ற நிலை தற்போது பாகிஸ்தான், வங்கதேசம் இடையே நிலவுகிறது. இதில் புதிய நகர்வாக தற்போது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுப்பிரிவு தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஆசிம் மாலிக் 4 நாள் பயணமாக வங்கதேசம் சென்றுள்ளார்.
இந்த பயணம் இந்தியாவிலும் விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்று பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்த இரு நாடுகளின் நெருக்கம் கடந்த 6 மாதங்களாகவே வலுப்பட்டு வருகிறது. பாகிஸ்தானும் வங்கதேசமும் தங்களுக்கு இடையிலான வர்த்தகத்தை 3 பில்லியன் டாலராக அதாவது தற்போதுள்ளதை விட 4 மடங்கு அதிகரிக்க இணங்கியுள்ளன.
பாகிஸ்தானுக்கு பிரத்யேக கடல் வழிப்பாதை ஏற்படுத்த வங்கதேசம் முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் முதல் வங்கதேச ராணுவத்தினருக்கு தங்கள் நாட்டில் பாகிஸ்தான் பயிற்சி தர உள்ளது. இரு நாட்டு கடற்படைகளும் கூட்டு பயிற்சி மேற்கொள்ள உள்ளன.
அண்மையில் வங்கதேச ராணுவ உயரதிகாரிகள் பாகிஸ்தான் சென்று அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவர் வங்கதேசம் சென்றுள்ளார். ஆனால், இந்த உறவு நீடிக்க வாய்ப்பில்லை என்றும் தற்காலிகமானதாகவே இருக்க வாய்ப்பு அதிகம் என்றும் கருத்துகள் உள்ளன.
ஹசினா அரசு கவிழ்ந்த பிறகு இந்தியா - வங்கதேச உறவில் விரிசல் விழுந்து காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஏற்கனவே வங்கதேசத்திலிருந்து ஊடுருவல்கள், போதைப்பொருள் கடத்தல்கள் என இந்தியா பாதிக்கப்பட்டு வந்த நிலையில் அங்கு சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களும் பதற்றத்தை அதிகரிப்பதாக உள்ளது. ஊடுருவல்களை தடுக்க எல்லையில் இந்தியா வேலி அமைத்து வரும் நிலையில் இது ஒப்பந்தத்திற்கு எதிரான செயல் என வங்கதேசம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தின் புதிய போக்கால் வடகிழக்கு மாநிலங்களில் பெரும் தாக்கம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இரு நாடுகளின் உறவாடலை உற்று கவனித்து வருவதாகவும் தேசப்பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால். ஏற்கனவே சீனா, பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளுடன் சுமுக உறவு இல்லாத நிலையில் வங்கதேசமும் இப்பட்டியலில் சேர்ந்துள்ளது தெற்காசியாவில் அரசியல், பாதுகாப்பு, வர்த்தக தளங்களில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது