நவாஸ் ஷெரீப்
நவாஸ் ஷெரீப்புதிய தலைமுறை

“நிலவில் இந்தியா... ஆனால் பாகிஸ்தானோ” - கடுமையாகச் சாடிய நவாஸ் ஷெரீப்

”பாகிஸ்தான் பிரதமர் ஒவ்வொரு நாடாகச் சென்று நிதிக்காக பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறார்” என அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
Published on

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், தற்காலிக பிரதமராக பலுசிஸ்தான் எம்.பி. அன்வர் உல் ஹக் கக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு, நாடாளுமன்றம் பதவிக்காலம் முடியும் முன்னரே, அதனைக் கலைத்ததால் 90 நாட்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் பாகிஸ்தானின் நிதிநிலைமை மோசமடைந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

நவாஸ் ஷெரீப்
பாகிஸ்தான்: வரலாறு காணாத வகையில் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை... பொதுமக்கள் அதிர்ச்சி!
நவாஸ் ஷெரீப்
நவாஸ் ஷெரீப்

இதையடுத்து பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அந்நாட்டைக் கடுமையாகச் சாடியுள்ளார். தற்போது இங்கிலாந்தில் வசித்துவரும் அவர், வீடியோ இணைப்பு வழியே பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடைபெற்ற கட்சிக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “இந்தியா நிலவை அடைந்து, ஜி-20 உச்சி மாநாட்டு கூட்டங்களை நடத்திக்கொண்டிருக்கும்போது, பாகிஸ்தான் பிரதமர் ஒவ்வொரு நாடாகச் சென்று நிதிக்காக பிச்சையெடுத்து கொண்டிருக்கிறார். இந்தியா அடைந்த சாதனைகளை பாகிஸ்தானால் ஏன் அடைய முடியவில்லை? இதற்கு யார் பொறுப்பு? இந்தியாவின் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது, அந்நாட்டிடம் பில்லியன் டாலர் மட்டுமே இருந்தது. தற்போது இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 600 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தியா இன்றைக்கு எங்கேயோ சென்றுவிட்டது. ஆனால், பாகிஸ்தான் உலக நாடுகளிடம் நிதிக்காக கையேந்திக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

அவருடைய இந்தப் பேச்சு, பாகிஸ்தான் அரசின் மீது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ஏற்கெனவே அந்நாடு பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு ஷெபாஷ் ஷெரீப் பிரதமராகப் பதவியேற்ற பின்னும், சீரான பொருளாதார நிலையை பாகிஸ்தானால் எட்ட முடியவில்லை. இதன் தொடர்ச்சியாகவே நவாஸ் ஷெரீப் கடுமையான விமர்சனங்களை ஷெபாஷ் ஷெரீப் அரசின்மீது முன்வைத்துள்ளார்.

நவாஸ் ஷெரீப்
நவாஸ் ஷெரீப்

நவாஸ் ஷெரீப் கடந்த 2019ஆம் ஆண்டு, அல்அஜிசியா மில் ஊழல் வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர் ஆவார். இதையடுத்து மருத்துவக் காரணங்களுக்காக தற்போது லண்டனில் வசித்து வரும் அவர், அக்டோபர் 21ஆம் தேதி நாடு திரும்ப உள்ளார். பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் தேர்தல் பரப்புரைக்காக அவர் தாயகம் திரும்ப உள்ளார் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com