பாகிஸ்தான்: வரலாறு காணாத வகையில் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை... பொதுமக்கள் அதிர்ச்சி!

பாகிஸ்தான் வரலாற்றில் உச்சபட்ச விலையாக ஒரு லிட்டர் பெட்ரோல் 331 ரூபாய்க்கும், டீசல் 329 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Pakistan
Pakistantwitter

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், தற்காலிக பிரதமராக பலுசிஸ்தான் எம்.பி. அன்வர் உல் ஹக் கக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் பாகிஸ்தானின் நிதிநிலைமை மோசமடைந்து வருகிறது. இதனால், அந்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நிதி நிலைமையைச் சமாளிக்க பெட்ரோல் டீசல் மீதான வரி இன்று (செப்.16) மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 26 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 17 ரூபாயும் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 305 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது கூடுதல் வரியுடன் சேர்த்து ஒரு லிட்டர் 331 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் 311 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது வரியுடன் சேர்த்து 329 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பாகிஸ்தான் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். பாகிஸ்தான் வரலாற்றில் உச்சபட்ச விலையாக ஒரு லிட்டர் பெட்ரோல் 331 ரூபாய்க்கும், டீசல் 329 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் வரலாற்றில் முதல்முறையாக பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை ரூ.300ஐ தாண்டியது குறிப்பிடத்தக்கது. அன்வர் உல் ஹக் கக்கர் தலைமையிலான அரசு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.14.91 மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.18.44 உயர்த்தியது. இதன்மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.305.56க்கும், டீசல் ரூ.311.54க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்த்தப்பட்டிருப்பது பாகிஸ்தான் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார சிக்கல் 6 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. அன்னியச்செலாவணி பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்களைக்கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய இயலாத நிலை உள்ளது. நோயாளிகளின் உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்துகளைக்கூட இறக்குமதி செய்ய இயலாத அளவுக்கு, பாகிஸ்தானில் நிலைமை மோசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com