”இனி, தந்தையைப் பார்ப்பது கடினம்” - இங்கி. வசிக்கும் இம்ரான் கான் மகன்கள் வேதனை!
”தனது தந்தையை மீண்டும் ஒருமுறைகூடப் பார்க்க முடியாது” என இங்கிலாந்தில் வசித்து வரும் இம்ரான் கானின் மகன்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது ஊழல் உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சிலவற்றில் தண்டனைபெற்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அடியாலாவில் தனிமைச் சிறையில் உள்ளார். இதற்கிடையே, அவருடைய மரணம் பற்றிய வதந்தி செய்திகள் உலகம் முழுவதும் பரவி, பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால், சிறை நிர்வாகம் அதை மறுத்த நிலையில், இம்ரான் கானின் 3 சகோதரிகளில் ஒருவரைப் பார்க்க அனுமதியளித்தது. இந்த நிலையில், ”தனது தந்தையை மீண்டும் ஒருமுறைகூடப் பார்க்க முடியாது” என இம்ரான் கானின் மகன்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இம்ரான் கானின் மகன்களான காசிம் மற்றும் சுலைமான் கான் ஆகிய இருவரும் இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர்.
வரும் ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், விசாவிற்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கும் அவர்கள், தன் தந்தையின் சிறைவாசம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். ஊடகம் ஒன்றிற்கு அவர்கள் அளித்துள்ள பேட்டியில், “அவர் இருக்கும் சிறையில் நிலைமைகள் மோசமாக உள்ளன. அவர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் அசுத்தமான தண்ணீரைக் குடிக்கிறார். மேலும், மரண அறையில் உளவியல்ரீதியாக சித்திரவதை செய்யப்படுகிறார். இதிலிருந்து வெளியேறுவதற்கான வழியைக் காண்பது மிகவும் கடினம். இப்போது அவரை மீண்டும் ஒருபோதும் பார்க்காமல் போய்விடுவோமோ என்று நாங்கள் கவலைப்படுகிறோம். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் தங்கள் தந்தையிடம் ஏழு மாதங்களாகப் பேசவில்லை. சமீபத்திய மரண வதந்திகள் நம்பமுடியாத அளவிற்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தின” என அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.

