வெடித்த வன்முறை | பாதியிலேயே நாடு திரும்பிய இலங்கை அணி.. சாம்பியன்ஸ் டிராபி நடக்குமா? ஐசிசி ஆலோசனை!
பாதியிலேயே நாடு திரும்பிய இலங்கை ஏ அணி
பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை ஏ கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் ஷாகீன்ஸ் அணியுடன் மூன்று 50 ஓவர்கள் போட்டியில் விளையாடப் பங்கேற்றிருந்தது. இதில், முதல் 50 ஓவர் போட்டி, கடந்த நவம்பர் 25ஆம் தேதி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் ஷாகீன்ஸ் அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. மற்ற இரு போட்டிகள் நவ.27 (இன்று) மற்றும் நவ.29 ஆகிய தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்தது. இதையடுத்து, பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக, இந்தத் தொடர் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரியமும் உறுதிபடுத்தியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இலங்கை கிரிக்கெட்டுடன் கலந்தாலோசித்து, அரசியல் நடவடிக்கை காரணமாக பாகிஸ்தான் ஷஹீன்ஸ்-இலங்கை ஏ தொடரின் கடைசி இரண்டு 50 ஓவர் போட்டிகளை ஒத்திவைத்துள்ளது. தொடரை முடிக்க புதிய தேதிகளை இறுதிசெய்ய இரு வாரியங்களும் ஒத்துழைக்கும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி பாகிஸ்தானில் வன்முறை
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், ஓராண்டுக்கும் மேலாகச் சிறையில் உள்ளார். அவர் பிரதமராக இருந்த காலகட்டத்தில் ஊழல் மற்றும் வன்முறை தொடர்பாக அவர்மீது 150க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இதில், ஒருசில வழக்குகள் மீது ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் ஒருசில வழக்குகளில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. என்றாலும், அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை.
அவரை விடுதலை செய்யக்கோரி அவரது ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியின்போது போராட்டக்காரர்களும், பாதுகாப்புப் படையினருக்கும் வெடித்த மோதல் வன்முறையாக மாறியது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்தும் பணியில் பாகிஸ்தான் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி நடக்குமா?ஐசிசி ஆலோசனை!
இது ஒருபுறமிருக்க, மறுபுறம், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடத்தப்படவிருக்கும் நிலையில், இம்முறையும் பாகிஸ்தானுக்குச் செல்ல இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இத்தொடரில் கலந்துகொள்ள இந்திய அணி பாகிஸ்தானிற்குச் செல்லாது என பிசிசிஐ, உறுதியாக தெரிவித்துள்ளது. மேலும், இந்திய அணியின் போட்டிகளை மட்டும் வேறு இடங்களுக்கு மாற்றி வைக்குமாறு கோரிக்கை வைத்திருந்தது. இதற்கு பாகிஸ்தான், “இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராவிட்டால் சாம்பியன்ஸ் டிராபி நடத்துவதை பாகிஸ்தான் கைவிட முடிவு செய்யும். இந்தியா மோதும் ஆட்டங்களை மட்டும் துபாயில் நடத்த வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை” என எச்சரித்திருந்தது.
இதையடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியாவின் போட்டிகளை நடத்த ஹைப்ரிட் மாடலை பின்பற்றுமாறு பிசிபியை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) கேட்டுக் கொண்டுள்ளது. பிசிபி இந்த நிபந்தைனைக்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், போட்டி முழுவதுமாக தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்படும் எனவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் இந்தியா, பாகிஸ்தான் வர மறுப்பதற்கு விளக்கம் கேட்டு பாகிஸ்தான் ஐசிசிக்கு கடிதம் எழுதியது. அதேவேளையில் போட்டியை பாகிஸ்தானில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றுவது இல்லை என்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது.
இந்த நிலையில், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதன் இயக்குநர்கள் குழு கூட்டத்தை கூட்டியுள்ளது. நவம்பர் 29ஆம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத்தில், ஓர் உறுதியான முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதும் பாகிஸ்தான் இந்தியா வேறு நாட்டில் விளையாடுவதற்கு உடன்படவில்லை என்றால், ஐசிசி வாரியத்தின் குழு உறுப்பினர்களிடையே ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படலாம். அதன்படி பார்த்தால், பாகிஸ்தான் இதற்கு ஒப்புக்கொண்டே ஆக வேண்டும் எனக் கூறப்படுகிறது. இதனால் இந்தியா போட்டிகள் மட்டுமல்லாது தொடரே வேறு நாட்டிற்கு மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.