”நீ ஒரு கோழை” - அமெரிக்காவிற்குச் சென்ற பாக். ராணுவத் தளபதி.. அவமானப்படுத்திய மக்கள்!
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையைத் தொடங்கி பதிலடி கொடுத்தது. இதற்கு பாகிஸ்தான் இந்திய எல்லைகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளைத் தாக்கியது. இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தாக்குதல் தொடர்ந்தது. அப்போது நடைபெற்ற சண்டையில், பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீர் அந்நாட்டின் படைகளுக்கு தலைமை தாங்கினார். தாக்குதல் நிறுத்தத்திற்குப் பிறகு அவருக்கு அந்நாட்டில் உயரிய பதவி வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதனால், அவர்மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டன.
இந்த நிலையில், அமெரிக்காவின் தேசிய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ஆசிம் முனீருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. அதன்படி, அமெரிக்காவுடனான ராணுவ மற்றும் தூதரக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் சையத் அசிம் முனீர், ஐந்து நாள் பயணமாக அந்நாட்டுக்கு அதிகாரப்பூர்வமாகச் சென்றடைந்தார். இந்த நிலையில், அமெரிக்காவில் அவருக்கு எதிராக பாகிஸ்தானியர்களே எதிர்ப்பு தெரிவித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.
வாஷிங்டனில் அவர் தங்கியிருந்த ஹோட்டலை விட்டு வெளியேறியபோது அவருக்கு எதிராக பாகிஸ்தானியர்களும், பாகிஸ்தான் வம்சாவளியினரும் ஒன்றுகூடி ”பாகிஸ்தானில் உண்மையான ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும்” என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள், "அசிம் முனீர், நீ ஒரு கோழை, உனக்கு அவமானம், நீ ஒரு வெகுஜனக் கொலைகாரன், நீ ஒரு சர்வாதிகாரி மற்றும் பாகிஸ்தானியர்களைக் கொன்றவன்" உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, அமெரிக்காவில் நடந்த ராணுவ அணிவகுப்பிற்கு ராணுவத் தளபதி முனீருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகச் செய்திகள் வைரலாகின. இது, இந்தியாவிலும் எதிர்வினையாற்றியது. குறிப்பாக, இதுதொடர்பாக காங்கிரஸ், பிரதமர் மோடியின் பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்தது. மேலும், இது சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இத்தகைய சூழலில்தான், ’முனீரை ராணுவ அணிவகுப்புக்கு அழைக்கவில்லை’ என வெள்ளை மாளிகை திட்டவட்டமாக மறுத்து செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், ராணுவ அணிவகுப்பு நடைபெற்ற அதேநாளில், முனீர் வாஷிங்டனில் இருந்தபோதிலும், அவர் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.