திவால் நிலையில் பாகிஸ்தான்.. கடனை உடனடியாக திருப்பி தாங்க.. பாகிஸ்தானுக்கு கெடு விதித்த UAE.!
கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடுமையாக சரிந்தது. இதனால் பாகிஸ்தான் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடமும், தனது நட்பு நாடுகளிடம் கடன் கோரி இருந்தது. இதனைத் தொடர்ந்து, ஐக்கிய அமீரக அரசு ஈரானுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவு, அதாவது இந்திய மதிப்பில் 25 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வழங்கியது. இந்த கடன் பாகிஸ்தான் மத்திய வங்கியில் பாதுகாப்பான வைப்புத் தொகையாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கடனுக்கு பாகிஸ்தான் அரசு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஆண்டுக்கு சுமார் 6% வட்டி செலுத்தி வருகிறது. அதோடு சுமார் 8 ஆயிரம் கோடி அளவுக்கு கடனை பாகிஸ்தான் திரும்ப செலுத்தியுள்ளது. இந்த நிலையில், மீதமுள்ள கடனை உடனே திரும்ப செலுத்தவேண்டும் என்றும், கூடுதல் சலுகைகள் வழங்கப்படமாட்டாது என்றும் ஐக்கிய அரபு அமீரகம் பாகிஸ்தான் அரசிடம் கூறியுள்ளது. மேலும், கடனைப் பணமாகத் திருப்பித் தர முடியாவிட்டால், பாகிஸ்தானில் உள்ள விமான நிலையம், துறைமுகம் அல்லது மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற அரசு நிறுவனங்களின் பங்குகளை அமீரகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.
பாகிஸ்தான் அரசு ஏற்கனவே பொருளாதார ரீதியில் தள்ளாடி வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து கடன் பெற பாகிஸ்தான் போராடி வருகிறது, இந்த சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த அழுத்தம் அந்நாட்டைத் திவாலாகும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இந்த கடனை 3 தவணையாக திரும்ப செலுத்துவோம் என பாகிஸ்தான் கூறியிருந்தாலும் இது அந்நாட்டு நாணய மதிப்பில் பெரும் சரிவை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஏனெனில் பாகிஸ்தானிடம் தற்போது சுமார் 21.4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மட்டுமே அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளது. இதில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2 பில்லியனைச் செலுத்தினால், பாகிஸ்தானின் கையிருப்பு சுமார் 19 பில்லியன் அமெரிக்க டாலராக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

