இந்திய பாதுகாப்பு இணையதளங்கள் மீது குறி.. சைபர் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரிலேயே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், இந்திய பாதுகாப்புத்துறை இணையதளங்களைக் குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பாதுகாப்புத் துறையின் முக்கிய இணையதளங்களைக் குறிவைத்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் சைபர் தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாதுகாப்புப்படை வீரர்களைப் பற்றியும் அவர்களது பின்புலம் மற்றும் பிற முக்கிய விவரங்களைப் பற்றியும் பொதுவெளியில் கசியக் கூடாத தரவுகளை ஹேக்கர்கள் திருடியிருப்பார்களோ என சந்தேகம் எழுந்துள்ளது.
‘ராணுவ பொறியியல் சேவைகள்’ மற்றும் ‘மனோஹர் பரிக்கர் பாதுகாப்பு விவகார படிப்புகள் மற்றும் ஆய்வுக்கான நிறுவனம்’ ஆகியவற்றின் தரவுகளைத் திருட்டுத்தனமாக அறிந்துகொள்ள பாகிஸ்தான் ஹேக்கர்கள் இணையவழியில் ஊடுருவியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சைபர் குற்றத்தில், ‘பாகிஸ்தான் சைபர் படை’ என்கிற எக்ஸ் சமூக வலைதளப் பக்கம் ஈடுபட்டிருப்பதாக் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த எக்ஸ் தள கணக்கு, இந்தியாவில் முடக்கப்பட்டுள்ள நிலையில், அதன் முகப்பு பக்கத்தில், இந்திய பாதுகாப்புப் படையின் இணையதளத்திலிருந்து திருடப்பட்ட படத்தை ஹேக்கர்கள் பதிவிட்டுள்ளனர். முன்னதாக, அதில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் ராணுவ டாங்கியின் நீக்கப்பட்டிருப்பதுடன் இப்போது இந்திய ராணுவ டாங்கியின் படம் பதிவேற்றப்பட்டுள்ளது. இதுதவிர, அவர்கள் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான, ‘ஆர்மர்ட் வெஹிகிள் நிகாம் லிமிடட்’ இணையதளத்தையும் முடக்க முற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, இணையவழியில் இதுபோன்ற சைபர் தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் இந்திய சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.