பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக சொல்லப்பட்டவர் தப்பியோடியபோது உயிரிழப்பு!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து என்.ஐ.ஏ. அமைப்பினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பயங்கரவாதிகளுக்கு உணவு மற்றும் தங்குமிடம் கொடுத்ததாக கூறப்பட்ட ஒருவர் பாதுகாப்புப் படையினரிடமிருந்து தப்பிக்கும்போது ஆற்றில் குதித்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பிருப்பதாக குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான இமிதியாஸ் அஹ்மத் மக்ரே என்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடைபெற்ற தொடர் விசாரணையில், குல்காமின் டாங்மார்க்கில் உள்ள காட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கு உணவு மற்றும் தளவாடங்களை வழங்கியதாக அவர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார் என சொல்லப்படுகிறது.
இதையடுத்து பயங்கரவாதிகள் தங்கியிருந்த அந்த மறைவிடப் பகுதியைக் காட்டச் சொல்லி, இம்தியாஸ் அகமது மக்ரேவை பாதுகாப்புப் படையினர் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, அவர்களிடமிருந்து தப்பிச் செல்லும் முயற்சியில் அருகிலிருந்த ஆற்றில் அவர் குதித்துள்ளார். இதில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார் அவர் தப்பிக்கும் காட்சி அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில், அந்த நபர் நீந்த முயற்சிக்கிறார். இருந்தபோதிலும் பலத்த நீரோட்டம் அவரை இழுத்துச் சென்றதால் அவர் நீரில் மூழ்கி இறந்தார்.
இதற்கிடையே, இந்தச் சம்பவத்துக்கு பாதுகாப்புப் படையினரின் கவனக்குறைவே காரணம் என சிலர் விமர்சித்தனர். இதையடுத்து, “அந்த நபரின் துரதிர்ஷ்டவசமான மரணத்திற்கு பாதுகாப்புப் படையினரை தவறாகக் குறை கூறக்கூடாது” என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மெஹபூபா முஃப்தி, இம்தியாஸ் அகமது மக்ரேயின் மரணத்தில் சதி இருப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தார். அவர், “இரண்டு நாட்களுக்கு முன்பு இம்தியாஸ் மக்ரேயை இராணுவம் அழைத்துச் சென்றதாகவும், இப்போது மர்மமான முறையில் அவரது உடல் ஆற்றில் வெளிவந்துள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்" என்று அவர் பதிவிட்டிருந்தார்.