US - IRAN ஒப்பந்தம் | அதிரடியாய் குறைந்த பெட்ரோல் விலை.. எங்கு தெரியுமா?
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தம், உலகளாவிய எண்ணெய் சந்தைகளில் நிலவிய அழுத்தத்தைக் குறைக்க உதவியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 74 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய மோதலால், உலகின் 20% கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது. இதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகமும், சர்வதேச வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக எண்ணெய் விலைகள் உயர்ந்ததோடு, பாகிஸ்தான் போன்ற இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நாடுகள் கடுமையான எரிபொருள் செலவுகளைச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திற்கும் உள்ளாயின.
இதனால், பாகிஸ்தானில் பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் லிட்டருக்கு 458 ரூபாய் வரை உயர்ந்தது. இந்தச் சூழலில்தான், பாகிஸ்தான் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்தம் காரணமாக, அமெரிக்கா - ஈரான் இடையே 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஈரான் மீதான கடல்வழித் தடையை அமெரிக்கா நீக்கியது. இதனால் முக்கியப் பகுதியான ஹார்முஸ் நீரிணை வழியாக சர்வதேச எண்ணெய்க் கப்பல் போக்குவரத்து தடையின்றித் தொடங்கியது. மேலும், கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில்தான், பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 74 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் டீசல் விலையும் லிட்டருக்கு 67 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த அதிரடி விலை குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.373-லிருந்து ரூ.299 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.378-லிருந்து ரூ.311 ஆகவும் குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு பாகிஸ்தான் நாட்டின் உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடியைக் குறைக்கவும், அங்கு நிலவும் கடுமையான பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

