பஹல்காம் தாக்குதல் |பாக் - இந்தியா இடையே மத்தியஸ்தம் செய்யும் ஈரான்!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இதற்கிடையே இந்த தாக்குதலால், பாகிஸ்தான் - இந்தியா இருநாட்டு உறவுகள் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. இருநாடு நாடுகளும் மாறிமாறி கெடுபிடிகளை விதித்துள்ளன. மேலும் இதன் காரணமாக எல்லையில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி, “இந்தியாவும், பாகிஸ்தானும் எங்கள் சகோதர நாடுகள். எங்கள் இடையே நூற்றாண்டு பழமையான கலாசாரம் மற்றும் நாகரிக உறவுகள் உள்ளன. மற்ற நட்பு நாடுகளைப்போல அவர்களுக்கும் நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம். இந்த இக்கட்டான நேரத்தில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிப்பதற்கு இரு நாடுகள் இடையே மத்தியஸ்தம் செய்ய ஈரான் தயாராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இதற்காக, அவர் புகழ்பெற்ற ஈரானிய கவிஞர் சாதி ஷிராசி எழுதிய 13ஆம் நூற்றாண்டின் பிரபலமான பாரசீகக் கவிதையான பானி ஆதாமையும் மேற்கோள் காட்டியுள்ளார். அதில், "மனிதர்கள் ஒரு முழுமையின் உறுப்பினர்கள், ஒரு சாராம்சம் மற்றும் ஆன்மாவை உருவாக்குவதில், ஒரு உறுப்பினர் வலியால் பாதிக்கப்பட்டால், மற்ற உறுப்பினர்கள் சங்கடமாகவே இருப்பார்கள்" என அக்கவிதை கூறுகிறது.