பஹல்காம் தாக்குதல் | பாகிஸ்தான் நடிகரின் ’அபிர் குலால்’ படத்திற்கு எதிர்ப்பு!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் மற்றும் இந்தி வாணி கபூர் நடிக்கும் 'அபிர் குலால்' படத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது. இந்தப் படம் மே 9, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 'அபிர் குலால்' இரண்டு நாடுகளின் எல்லைகளைக் கடக்கும் ஒரு காதல் கதையை மையமிட்டு எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்தில் ஃபவாத் கான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வாணி கபூர் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஆர்த்தி எஸ். பக்ரி இயக்கியுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் மற்றும் அவரின் 'அபிர் குலால்' படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் குரல்கள் எழுந்துள்ளன. திரைப்படக் கலைஞர்களின் அமைப்பான மேற்கு இந்திய சினிமா ஊழியர்களின் கூட்டமைப்பு, இந்தியத் திரைப்படத் துறையில் உள்ள பாகிஸ்தான் கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைப் புறக்கணிக்க வலியுறுத்தியுள்ளது. மேற்கு இந்திய திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு என்பது இந்திய திரைப்படத் துறையில் உள்ள 32 வெவ்வேறு தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட ஒரு குடை அமைப்பாகும், இதில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
இதுகுறித்து அந்த அமைப்பு, "தொடர்ச்சியான உத்தரவு இருந்தபோதிலும், பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கானுடன் இந்தி படமான 'அபிர் குலால்' படத்திற்காக சமீபத்தில் இணைந்து பணியாற்றியது குறித்து எங்களுக்குத் தெரிய வந்துள்ளது. பஹல்காமில் சமீபத்தில் நடந்த தாக்குதலை அடுத்து, எந்தவொரு இந்திய திரைப்படம் அல்லது பொழுதுபோக்கு திட்டங்களிலும் பங்கேற்கும் அனைத்து பாகிஸ்தான் கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் முழுமையாக புறக்கணிக்க FWICE மீண்டும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதில் உலகில் எங்கும் நடைபெறும் நிகழ்ச்சிகள் அல்லது ஒத்துழைப்புகள் அடங்கும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அது, "எங்கள் அமைப்பின் எந்தவொரு உறுப்பினரோ அல்லது அதன் துணை சங்கங்களோ, நடிகர்கள், இயக்குநர்கள், பிற தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அல்லது தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவர்கள் பாகிஸ்தான் பணியாளர்களுடன் ஒத்துழைத்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். மேலும், 'அபிர் குலால்' இந்தியாவில் வெளியிடப்படாமல் இருப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்" என அது தெரிவித்துள்ளது.
முன்னதாக இதே படத்தை, ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா, படத்தை வெளியிட விடமாட்டோம் என்று கூறியிருந்தது. இதற்கிடையே, பிரபல நடிகர் ஃபவாத் கான், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், “பஹல்காமில் நடந்த கொடூரமான தாக்குதல் பற்றிய செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். இந்த கொடூரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. மேலும் இந்த கடினமான நேரத்தில் அவர்களின் குடும்பங்களுக்கு வலிமையையும் குணத்தையும் அளிக்க நாங்கள் பிரார்த்திக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.