”எழு, மகனே! இந்த மண்ணின் குருதியைப் பார்".. கவிஞர் பாப்லோ நெருடாவின் பிறந்த நாள் பகிர்வு!
செய்தியாளர்: கே.கே.மகேஷ்
உலகின் நீண்ட கடற்கரை நாடுகளில் ஒன்றான சிலியில் பிறந்த பாப்லோ நெருடாவின், காதல் உணர்வை அந்தக் கடலின் ஆழத்தோடும், போராட்ட குணத்தை கடல் அலைகளின் ஆர்ப்பரிப்போடும் ஒப்பிடலாம்.
“இன்றிரவு நான் நீண்ட கவிதை எழுத முடியும்... உன்னை இழந்த வெறுமையை, நட்சத்திரங்களின் தனிமையை...” 1924-இல் வெளியான "Twenty Love Poems and a Song of Despair" கவிதை நூலில் இடம்பெற்ற வரிகள் இவை. இந்த நூல் நெருடாவை உலகப் புகழ் பெறச் செய்தது. காதலின் இன்பத்தையும், வலியையும், தவிப்பையும் வெளிப்படுத்தி, வாசிப்போரை நெகிழச் செய்தது நெருடாவின் கவிதைகள். உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் காதல் கவிதைகள் இருக்கலாம், கவிஞர்கள் இருக்கலாம். உலகக் காதலர்களுக்கான கவியாக போற்றப்பட்டார் நெருடா.
நெருடா தன்னைச் சுற்றி நடக்கும் அரசியலைக் கண்டுகொள்ளாமல், தனி உலகில் சஞ்சரித்த கவிஞர் அல்ல. மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர். ஸ்பானிஷ் உள்நாட்டுப் போரின்போது ஜனநாயகத்திற்காகப் போராடிய நெருடா, சிலி நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் பாடினார். அவரது "Canto General" கவிதைத் தொகுப்பு, தென் அமெரிக்காவின் அடக்குமுறைகளையும், மக்களின் எழுச்சியையும் பதிவு செய்தது.
”எழு, மகனே! இந்த மண்ணின் குருதியைப் பார், நம் வேர்களை உயிர்ப்பிக்கும் இந்தப் போராட்டத்தைப் பார்" என்பது அதில் இடம்பெற்ற வரிகளில் ஒன்று. 1971-இல், நெருடாவுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. "காதலுடன், அரசியலையும் சேர்த்து மனித உணர்வுகளை உலகளவில் பதிவு செய்தவர்" என்று நோபல் குழு அவரைப் பாராட்டியது. உலகிலிருந்து மறைந்துவிட்டாலும், லட்சக்கணக்கான காதலர்களின் வாட்ஸ் அப், இன்ஸ்டா ஸ்டேடஸ்களிலும், புரட்சிகர அரசியல் பேச்சாளர்களின் மேற்கோள்களிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் பாப்லோ நெருடா.
"நீங்கள் என்னை மறந்தாலும், நான் உங்களை காதலிக்கிறேன், எனவே இந்த உலகம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. - பாப்லோ நெருடா