\
Oman Shocks US! Tops India's LNG Supplier Rankings
LNG Oman Reuters

அமெரிக்காவுக்கு அதிர்ச்சி.. LNG சந்தையில் முதலிடம் பிடித்த ஓமன்!

செப்டம்பர் மாதத்தில் இந்தியாவுக்கு அதிக எரிவாயு வழங்கிய நாடாக ஓமன் முதலிடம் பிடித்தது. ஆனால், மே முதல் செப்டம்பர் வரையில், அமெரிக்காவே இந்தியாவுக்கு அதிக எரிவாயு வழங்கிய நாடாகத் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

இந்தியாவுக்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) அதிக அளவில் வழங்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முன்னிலையில் இருந்தது. தற்போது அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி ஓமன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துப் பாதிப்புகள் இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன.

LNG Oman
LNG Oman Reuters

இந்தியா தனது LNG தேவையின் பெரும்பகுதியை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. குறிப்பாக, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளில் இருந்து வரும் எரிவாயு, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவை வந்தடைகிறது.

ஆனால், மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள மோதல்களால் இந்தக் கடல் வழிப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு வரும் எரிவாயு விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் ஓமனின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. அந்நாட்டின் எல்என்ஜி ஏற்றுமதி மையங்கள் ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியே அமைந்துள்ளதால், அந்தப் பாதையில் ஏற்படும் தடைகளைத் தவிர்த்து இந்தியாவுக்கு எரிவாயுவை அனுப்பி வருகிறது ஓமன்.

Gail India
Gail IndiaReuters

சர்வதேச சந்தையில் எல்என்ஜி விலை உயர்ந்திருந்தாலும், இந்தியாவின் இறக்குமதி செப்டம்பர் மாதத்தில் 22.4 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 7 சதவீதம் அதிகமாகும்.

உரத் தயாரிப்பு மற்றும் நகர எரிவாயு விநியோகம் போன்ற துறைகளில் எரிவாயுவின் தேவை தொடர்ந்து இருப்பதால், விலை உயர்வையும் தாண்டி இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

இதன் மூலம், மேற்கு ஆசியப் போர் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தியாவின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதில் ஓமன் முக்கிய விநியோக நாடாக உருவெடுத்துள்ளது.

கெப்ளர் நிறுவனத்தின் தரவுகளின்படி, 2026 செப்டம்பர் மாதத்தில் ஓமனில் இருந்து இந்தியாவுக்கு வந்த எல்என்ஜி அளவு 11.6 சதவீதம் அதிகரித்து 5.9 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்த எரிவாயு அளவு 60.7 சதவீதம் சரிந்து 3.4 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது. அமெரிக்கா தனது எல்என்ஜி ஏற்றுமதியின் பெரும்பகுதியை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பியதே இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. நைஜீரியா 3.5 லட்சம் டன் எரிவாயுவுடன் அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது.

Oman Shocks US! Tops India's LNG Supplier Rankings
Jio-வைத் தட்டிப் பறிக்க வருகிறாரா மஸ்க்? மலிவு விலையில் Starlink சேவைகள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com