Jio-வைத் தட்டிப் பறிக்க வருகிறாரா மஸ்க்? மலிவு விலையில் Starlink சேவைகள்!
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை மலிவு விலையில் வழங்க மஸ்க் திட்டமிட்டுள்ளார். ஜியோவுடன் நேரடி போட்டி உருவாகும் நிலையில், இந்திய மக்களுக்கு அதிக இணையத் தேர்வுகள் கிடைக்கும். ஆனால், மஸ்க் -இன் குறைந்த விலை திட்டம் அம்பானியின் லாபத்தை பாதிக்கக்கூடும்.
செய்தியாளர் - M.மீரா
இந்தியாவில் தனது ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணையச் சேவையை மலிவு விலையில் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் மிகப்பெரிய பங்குச் சந்தைப் பட்டியலுக்குத் தயாராகி வரும் நிலையில், மஸ்க்கின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்துக்குச் சொந்தமான Starlink, செயற்கைக்கோள்கள் மூலம் இணையச் சேவையை வழங்குகிறது. இந்தியாவில் இந்தச் சேவையைத் தொடங்குவதற்கான இறுதிக்கட்ட பாதுகாப்பு அனுமதிக்காக நிறுவனம் காத்திருக்கிறது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. அந்த நிறுவனத்துக்கும் இறுதிக்கட்ட பாதுகாப்பு அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் குறைந்த விலையில் டேட்டா வழங்கியதன் மூலம் ஜியோ மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றது. இதேபோல், குறைந்த விலையை முன்வைத்து மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குப் போட்டியாக களத்தில் இருப்பது மஸ்க்கின் திட்டமாகவும் உள்ளது.
இந்தியாவில் ஒரு ஜிபி மொபைல் டேட்டாவின் விலை சுமார் ரூ0.97 மட்டுமே. உலகிலேயே மிகவும் குறைந்த விலையில் டேட்டா கிடைக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எனவே, இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை மலிவு விலையில் வழங்க வேண்டிய கட்டாயம் மஸ்க்குக்கு உள்ளது.
இதுகுறித்து தனது எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் பதிவிட்ட மஸ்க், இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை அதிக விலையில் இருந்தால் யாரும் வாங்க மாட்டார்கள். எனவே, அதன் விலையை மலிவாக வைத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், போட்டி அதிகரிப்பதால் இந்திய மக்களுக்கு அதிகமான இணையச் சேவைத் தேர்வுகள் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் அம்பானியின் லாபம் குறையலாம்; ஆனால் அவரது நிறுவனம் தொழிலில் இருந்து வெளியேறிவிடாது என்றும் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையைத் தொடங்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தடைகளை ஏற்படுத்துவதாகவும், ஜியோ நிறுவனத்துக்குச் சாதகமாகச் செயல்படுவதாகவும் மஸ்க் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
வெள்ளிக்கிழமை இரவும் அம்பானியை நேரடியாகக் குறிப்பிட்ட மஸ்க், அவரை “பிரதமர் அம்பானி” என்று கிண்டலாக அழைத்து, ஸ்டார்லிங்க் நிறுவனத்தைப் போட்டியிட அனுமதிப்பாரா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனால், அனுமதி வழங்கும் நடைமுறையில் எந்த நிறுவனத்துக்கும் பாரபட்சம் காட்டப்படவில்லை என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. ஸ்டார்லிங்க் உள்ளிட்ட மூன்று செயற்கைக்கோள் இணைய நிறுவனங்களும் இறுதிக்கட்ட பாதுகாப்பு அனுமதிக்காகக் காத்திருப்பதாகவும் கூறியுள்ளது.
இந்தியாவில் குறைந்த விலை இணையச் சேவையை வழங்குவதில் ஜியோவும் ஸ்டார்லிங்கும் நேரடிப் போட்டியாளர்களாக மாறும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால், ஸ்டார்லிங்கின் இந்தியச் சேவைக் கட்டணம் எவ்வளவு இருக்கும் என்பது குறித்து மஸ்க் இன்னும் அறிவிக்கவில்லை.

