கண்ணிவெடியில் சிக்கிய எண்ணெய் கப்பல்! பற்றி எரிந்த தீ.. ஈரான் அதிரடி எச்சரிக்கை!
ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து வெளியேற முயன்ற மிகப்பெரிய கச்சா எண்ணெய் கப்பல், கடலில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் சிக்கி வெடித்துத் தீப்பற்றி எரிந்ததாக ஈரான் ஊடகமான பிரஸ் டிவி தெரிவித்துள்ளது.
அனுமதியற்ற மற்றும் ஆபத்தான பாதையில் கப்பல் சென்றதே இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.
கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்ல முயன்றபோது, தனது வழிசெலுத்தும் கருவிகளையும், உலகளாவிய இருப்பிடத்தைக் கண்டறியும் GPS அமைப்பையும் அணைத்துவிட்டதாக ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, கடலில் இருந்த கண்ணிவெடியில் கப்பல் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் ஏற்பட்ட தீ மிகப்பெரிய அளவில் இருந்ததாகவும், கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் வசித்தவர்கள்கூட தீயைக் கண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு விதிகளை மீறி, அனுமதியில்லாத பாதையில் செல்லும் எண்ணெய் கப்பல்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஈரானின் பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது.
மேலும், அனுமதியில்லாத பாதையில் செல்லும் கப்பல்கள் மீதான நடவடிக்கை ஹார்முஸ் ஜலசந்தியுடன் மட்டும் நிற்காது என்றும், அந்தப் பிராந்தியம் முழுவதும் அவை துரத்தப்பட்டு தண்டிக்கப்படும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து ஹார்முஸ் ஜலசந்தி தங்கள் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறது. இதன் காரணமாக, இந்த முக்கியமான கடல் வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா தங்களது கோரிக்கைகளை ஏற்று, ஈரானின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வரை இந்தக் கடல் வழியை மீண்டும் திறக்க மாட்டோம் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையைத் தொடர தங்கள் நாடு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
கப்பலில் ஏற்பட்ட தீ பற்றி ( UKMTO ) பிரிட்டன் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு கூறுகையில், அடையாளம் தெரியாத ஒரு பொருள் தாக்கியதாகக் கப்பலின் கேப்டன் தெரிவித்துள்ளார். இதனால் கப்பலில் தீப்பற்றியுள்ளது.
கப்பலில் இருந்த பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கப்பலுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, அந்தப் பகுதியில் பயணிக்கும் மற்ற கப்பல்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் ஏதேனும் தென்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

