பிரிட்டனுக்கு நார்வே எச்சரிக்கை : "நாங்க செஞ்ச தப்ப நீங்க செய்யாதீங்க".. பெரும் சிக்கலில் EU!
பிரிட்டன் EEA ஒப்பந்தத்தில் இணைந்தால், ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டங்களை ஏற்க வேண்டியிருக்கும் நிலையில், நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோரே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது பிரிட்டனுக்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு உறுப்பு நாடாக இருந்த பிரிட்டன், அந்த அமைப்பில் இருந்து வெளியேறவேண்டுமா வேண்டாமா என்பது குறித்து கடந்த 2016-ம் ஆண்டு பொதுமக்களிடையே வாக்கெடுப்பு நடத்தியது. இதில் இதில் 51.9% மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்று வாக்களித்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் முழுமையாக வெளியேறியது.
பிரெக்சிட் என அழைக்கப்பட்ட இந்த நிகழ்வுக்கு பின்னர் பிரிட்டனில் பெரும் பொருளாதார சரிவுகள் ஏற்பட்டது. இதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியதே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக பிரிட்டனை மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்க்க ஒரு பக்கம் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
அதே போல ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையாமல் EEA (European Economic Area) என அழைக்கப்படும் ஐரோப்பிய பொருளாதார ஒப்பந்தத்தின் மூலம் ஐரோப்பிய நாடுகளும் வியாபாரம் செய்யும் யோசனையையும் சில பிரிட்டன் தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கமாக இல்லாவிட்டால் கூட EEA ஒப்பந்தத்தின்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை ஏற்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளோடு வர்த்தகம் மேற்கொள்ளமுடியும்.
ஆனால் பிரிட்டன் EEA ஒப்பந்தத்தில் இணைந்தால் அது அந்நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோரே (Jonas Gahr Støre) எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பிரிட்டன் மக்கள் அதிலிருந்து வெளியேற வாக்களித்தனர். ஆனால், EEA ஒப்பந்தத்தை தேர்ந்தெடுத்தால், சட்டங்களை இயற்றுவதில் எந்தப் பங்குமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டங்களை அப்படியே ஏற்க வேண்டியிருக்கும். நார்வே போன்ற சிறிய மக்கள் தொகை கொண்ட நாடுகளுக்கு EEA ஒப்பந்தம் ஒரு தீர்வாக இருக்கும். ஆனால் பல கோடி மக்கள் தொகை கொண்ட பிரிட்டனுக்கு இது பேரழிவாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
நார்வே ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இல்லாவிட்டாலும் கூட ஐரோப்பிய ஒன்றியத்துடன் EEA ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டால் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டங்களை தீர்மானிக்கும் EU கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ளவோ, வர்த்தக விதிகளையோ அல்லது அங்கு கொண்டுவரப்படும் சட்டங்கள் குறித்த வாக்களிக்கும் உரிமை கிடையாது. ஆனால் EU கவுன்சில் கொண்டுவரும் சட்டங்களை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டங்களை எதிர்த்து நார்வேயில் அடிக்கடி போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், EEA ஒப்பந்தத்தில் கூட பிரிட்டன் இணையவேண்டாம் என நோர்வே பிரதமர் கூறியுள்ளது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

