5 நிமிடங்களுக்கு ஒரு ஸ்கிரீன் ஷாட்... வடகொரிய செல்ஃபோன் மூலம் வெளிவந்த அதிர்ச்சி!
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அரசாங்கத்தின் கீழ், அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்த உண்மை தான். ஆனால், இந்த அளவிற்கா? என ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் இருந்தது, ஒரு செல்போன் மூலம் கசிந்த ரகசியங்கள்.
கடந்த ஆண்டு வடகொரியாவில் இருந்து கடத்திவரப்பட்ட செல்போன் ஒன்று, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது, அதிபர் கிம் ஜாங் உன் ஒரு கொடுங்கோல் அரசன் போல செயல்படுவதும், தென்கொரிய மற்றும் மேற்கத்திய கலாச்சாரங்கள் எதுவும், வடகொரியாவில் புகுந்துவிடாத வண்ணம், கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருப்பதும் அம்பலமானது.
வடகொரியாவில் பயன்படுத்தும் செல்போன்கள், இணையசேவையை பயன்படுத்த முடியாத வகையிலும், தென்கொரிய சீரியல்கள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளை பார்க்க முடியாத வகையிலும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், தென்கொரியாவில் பெண்கள் தங்களைவிட வயதில் மூத்த நபர்களையோ, நண்பர்களையோ குறிக்கும் “ஒப்பா” என்கிற வார்த்தையை செல்ஃபோனில் டைப் செய்தால், அது உடனே ஆட்டோ கரெக்ட் ஆகி “காம்ரேட்” அதாவது தோழர் என சுயமாக மாறிக் கொள்ளுமாம்.
அது மட்டுமல்ல.. போனில் தென்கொரியா என டைப் செய்தால், பொம்மை அரசு என அந்த சொற்றொடர் மாறும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆச்சரியமே இனிமேல் தான் உள்ளது..
கடத்தி வரப்பட்ட அந்த செல்போன், பயனர்களை கண்காணிக்க அவர்களுக்கே தெரியாமல் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை தானாகவே ஸ்கிரீன் ஷாட் எடுக்கிறது. இந்த ஸ்கிரீன் ஷாட் புகைப்படங்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வ நபர்கள் மட்டுமே பயன்படுத்தும் ஓர் இடத்தில் சேமித்து வைக்கப்படுகின்றன.
இந்த ஸ்கிரீன் ஷாட் புகைப்படங்களை வைத்து யாரேனும் தவறான நடவடிக்கையில் ஈடுபடுவது தெரியவந்தால், அவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படுமாம்.. சுதந்திரம் என்ற சொல்லுக்கு எதிர் சொல் என்ன? என்று கேட்டு கோடிட்டால் அதில் வடகொரியா என இட்டு நிரப்பலாம்... அந்த அளவிற்கு அதிபர் கிம் ஜாங் உன், தன் மக்களை அடக்கி ஆள்கிறார்.