3000 வீரர்கள் இறப்பு.. ஆனாலும் ரஷ்யாவுக்கு ஆதரவாக மேலும் வீரர்களை அனுப்பும் வடகொரியா!
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே, ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஏவுகணைகள், அணு ஆயுதம் மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட உதவிகளைச் செய்திருப்பதாக அமெரிக்கா, உக்ரைன், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் உறுதிப்படுத்தியிருந்தன.
இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில்கூட, இந்தப் போரினால் ரஷ்யாவின் அணு ஆயுதப் படை தளபதி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா உள்பட பலநாடுகள் முயன்றன. ஆனால் ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் இன்றுவரை முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே, உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ள தயார் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், ரஷ்யாவுக்கு மேலும் ராணுவ வீரா்களை அனுப்ப வட கொரியா தயாராகிவருவதாக தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு முப்படைகளின் கூட்டு தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஷ்யாவுக்குக் கூடுதலாகச் சிறப்புப் படை வீரா்களை அனுப்புவதற்கான ஆயத்த நடவடிக்கைகளி வட கொரியா இறங்கியுள்ளதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக, இலக்குகளை மோதி அழிக்கக்கூடிய ட்ரோன்கள் உள்ளிட்ட ஆயுதங்களையும் ரஷ்யாவுக்கு விநியோகிக்க வட கொரியா ஆயத்தமாகிவருகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள வட கொரியா, போரில் பயன்படுத்துவதற்காக ரஷ்யாவுக்கு ஆயுதங்களையும் விநியோகித்து வருவதாகக் கூறப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, உக்ரைனில் ரஷ்ய படையினருடன் இணைந்து சண்டையிடுவதற்காக 12,000 வட கொரிய ராணுவ வீரா்கள் ரஷ்யா அழைத்துச் செல்லப்பட்டதாக அமெரிக்காவும் உக்ரைனும் தெரிவித்திருந்தன.
ரஷ்யாவின் கூா்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியுள்ள உக்ரைன் ராணுவத்துக்கு எதிரான போரில் வட கொரிய வீரா்கள் ஈடுபடுத்தப்படுவதாகக் கூறிய தென் கொரிய முப்படைகளின் கூட்டுத் தலைமையகம், மோதலில் 100 வட கொரிய வீரா்கள் கொல்லப்பட்டதாகவும் சுமாா் 1,000 வீரா்கள் காயமடைந்ததாகவும் கூறியது.
இந்தச் சூழலில், ரஷ்யாவுக்கு மேலும் வீரா்களை அனுப்ப வட கொரியா ஆயத்தமாகி வருவதாக தென் கொரியா தற்போது கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இந்தப் போரில் 3,000 வடகொரியா வீரர்கள் இறந்ததாக உக்ரைன் அதிபர் ஜெலோன்ஸ்கி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.