குண்டு வீசிய போர் விமானங்கள்; வடகொரியாவுக்கு மிரட்டல்? 3 நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த கிம் ஜாங்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் எல்லை பிரச்னை எப்படி தீர்க்கப்படாமல் உள்ளதோ அதே போல தான் தென்கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் தீர்க்கப்படாத பல பிரச்னைகள் உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கும் நீடித்து வருகிறது.
இதில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர். தொடர்ந்து அமெரிக்காவின் நடவடிக்கைளை எதிர்த்தும் விமர்சித்தும் வருகிறார்.
வடகொரியாவிடம் அணு ஆயுதங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இருப்பதால் இது அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே உள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய 3 நாடுகளும் கூட்டு போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த போர் ஒத்திகை வடகொரியாவின் எல்லைப்பகுதியில் நடந்தது..
இந்த ஒத்திகையின் போது, அமெரிக்காவின் பி-52எச் போர் விமானம், தென்கொரியாவின் கேஎப்-16, ஜப்பானின் எப்-2 போர் விமானங்கள் டம்மி இலக்குகளை குறி வைத்து குண்டு வீசின. அப்போது அமெரிக்க போர் விமானம் ஒன்று வடகொரியாவின் எல்லை பகுதிக்கு மிக அருகாமையில் சென்றது.
இதனால் ஆத்திரமடைந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா மூன்று நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் மூன்று நாடுகளின் அச்சுறுத்தலையும் சமாளிக்கும் ராணுவ நடவடிக்கைக்கு வடகொரியா தயார் நிலையில் இருக்கிறது'' என காட்டமாக குறிப்பிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள திடீர் பதிவு தான் வடகொரியா- தென்கொரியா இடையே போர் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.