Satyajit Ray | சத்யஜித் ரேயின் மூதாதையர் வீடு.. இடிக்கப்பட்டதற்கு இந்தியா வருத்தம்!
பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும் எழுத்தாளருமானவர் சத்யஜித் ரே. இவருடைய தாத்தா உபேந்திர கிஷோர் ரே சவுத்ரி. இவரும் பிரபல இலக்கியவாதியாவார். இந்த நிலையில், வங்கதேசத்தின் டாக்காவிலிருந்து சுமார் 120 கிமீ வடக்கே மைமென்சிங்கில் அமைந்துள்ள இந்த வீடு, ஒரு நூற்றாண்டுக்கு முன்பு உபேந்திர கிஷோரால் கட்டப்பட்டது. 1947 பிரிவினைக்குப் பிறகு, இந்தச் சொத்து அரசாங்க உரிமையின்கீழ் வந்தது. மேலும் 1989இல் மைமென்சிங் ஷிஷு அகாடமியாக மீண்டும் பயன்படுத்தப்பட்டது. ஹரிகிஷோர் ரே சவுத்ரி சாலையில் அமைந்துள்ள அந்த நூற்றாண்டு பழைமையான வீடு, சுமார் 10 ஆண்டுகளாக கைவிடப்பட்டு, சீரழிந்த நிலையில் உள்ளது. ஆகையால், அதை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டுவதற்கான முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய கட்டடத்திற்காக அந்த வீடு இடிக்கப்படும் நிலையில், அதற்கு இந்தியா வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் அதைப் பழுது பார்க்கவும், மறுகட்டமைப்பு செய்யவும் உதவ இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
”வங்கதேச கலாசார மறுமலர்ச்சியைக் குறிக்கும் கட்டடத்தின் மைல்கல் அந்தஸ்தை கருத்தில்கொண்டு, இடிப்பை மறுபரிசீலனை செய்வதும், அதன் பழுது மற்றும் புனரமைப்புக்கான விருப்பங்களை ஆராய்வதும் விரும்பத்தக்கதாக இருக்கும். இது இலக்கிய அருங்காட்சியகமாகவும் இந்தியா மற்றும் வங்கதேசத்தின் பகிரப்பட்ட கலாசாரத்தின் அடையாளமாகவும் இருக்கும். இந்த நோக்கத்திற்காக இந்திய அரசு ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கும்" என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த வீட்டைப் பாதுகாக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசை வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.