வடகொரியா | சர்வதேச சுற்றுலாவுக்கு அனுமதி.. திடீர் முடிவுக்கு என்ன காரணம்?
வடகொரியா நாட்டின் செய்திகள் எதுவும் அவ்வளவு எளிதில் வெளிவருவதில்லை. காரணம் கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் அங்கே கடுமையானவை என்று சொல்லப்படுகிறது. பல வினோத கட்டுப்பாடுகள் இருப்பதாக சொல்லப்படும் வடகொரியா, அடிக்கடி ஏவுகணைகளை ஏவி பரிசோதித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இதனால், உலகின் சில நாடுகளிலிருந்து அந்த நாட்டுக்குப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டின் பொருளாதார நிலைமையைக் கருத்தில்கொண்டு, வடகொரியாவில் மீண்டும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை அனுமதித்திருப்பதாகக் கூறப்படுகிறது. உலகளவில் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா நோய்த் தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, கடந்த 2020ஆம் ஆண்டில் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகையை வடகொரியா நிறுத்திவைத்தது.
ஆனால், தற்போது நாட்டின் பொருளாதார நிலைமையைக் கருத்தில்கொண்டு, வடகொரிய அரசு மீண்டும் சர்வதேச சுற்றுலா பயணிகளை அனுமதித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த 5 ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகள் நிறுத்திவைக்கப்பட்டாலும், ரஷ்யாவுடனான நெருக்கம் காரணமாக 2024-இல் அந்நாட்டைச் சேர்ந்த 100 பேர் மட்டும் வடகொரியாவில் சுற்றுலாவுக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இந்த எண்ணிக்கை அதிகம் என அண்டை நாடான தென்கொரியா தெரிவித்துள்ளது. அந்த ஆண்டு முழுவதும் மொத்தம் சுமார் 880 ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் வடகொரியாவுக்கு விஜயம் செய்ததாக தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம், ரஷ்ய அதிகாரப்பூர்வ தரவுகளை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வடகொரியாவின் வர்த்தகத்தில் முக்கியப் பங்களிக்கும் சீனாவுக்கும் தற்போது அனுமதியளித்துள்ளது. சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயண நிறுவனம் ஒன்று, பிப்ரவரி 20 முதல் 24 வரை வடகொரியாவின் எல்லை நகரமான ராசனுக்கு 13 பேரை சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளது. கொரோனா நோய்த் தொற்றுக்கு முன்னதாக, வடகொரியாவுக்கு சர்வதேச சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வதில் சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள்தான் 90 சதவிகிதத்தைப் பெற்றிருந்தன.
முந்தைய ஆண்டுகளில் ஆண்டுதோறும் 3,00,000 சீன சுற்றுலாப் பயணிகள் வடகொரியாவிற்கு வருகை தந்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், வடகொரியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியில், வரும் ஜூன் மாதத்தில் கிழக்கு கடற்கரையில் ஒரு பெரிய சுற்றுலாத் தளத்தைத் திறக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.