”போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது” - ட்ரம்ப் ஆதங்கம்!
உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான்தான் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வந்தார். இதற்கு பிரதமர் மோடி அண்மையில் மறுப்பு தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக தொலைபேசியில் அதிபர் ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி தெளிவுபடுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, அமெரிக்கா சென்றிருந்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் மூனீர், போர் நிறுத்தம் தொடர்பாக அதிபர் ட்ரம்புவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கலாம் என பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்குவது தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலாகி வருகின்றன.
இந்தச் சூழலில் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது என அதிபர் ட்ரம்ப் ஆதங்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ருவாண்டா மற்றும் காங்கோவின் பிரதிநிதிகள் திங்கட்கிழமை வாஷிங்டனில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள். இது ஆப்ரிக்காவிற்கு மட்டும் அல்ல, உலகிற்கும் ஒரு சிறந்த நாள். இதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது.
எகிப்துக்கும், எத்தியோப்பியாவிற்கும் இடையில் அமைதியைப் பேணுவதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. மத்திய கிழக்கில் ஆபிரகாம் ஒப்பந்தங்களைச் செய்ததற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. ரஷ்யா, உக்ரைன், இஸ்ரேல், ஈரான் உட்பட நான் என்ன செய்தாலும் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது” எனத் தெரிவித்துள்ளார்.