'அமெரிக்காவுடன் அணுசக்திப் பேச்சுவார்த்தை இல்ல..'! - ஈரான்
ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா–ஈரான் இடையிலான மறைமுக மோதல்கள், ஏவுகணைத் தளங்கள் மீது தாக்குதல், ட்ரோன் வீழ்த்தல் போன்ற பதற்றங்கள் தொடரும் நிலையில், அணுசக்தி தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என்று ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போரின் காரணமாக 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருகிறது. போரை நிரந்தரமாக நிறுத்தும் பேச்சுவார்த்தைகளும் இழுபறியாகவே இருந்து வருகிறது.
இவ்வாறு பேச்சுவார்த்தைக்கான இழுபறிகளுக்கு மத்தியில் ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் புதைத்துக் கொண்டிருந்த படகுகள் மீது அமெரிக்க தாக்குதல் நடத்தியது.
அமெரிக்காவின் இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானிய வான் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்காவின் MQ-9, RQ-4 போன்ற ஆளில்லா விமானங்களை ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியது.
இதனைத் தொடர்ந்து ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்புகள், ஒரு தரைக்கட்டுப்பாட்டு நிலையம் மற்றும் ஈரானின் ட்ரோன்களை அழித்து உடனடியாக அமெரிக்க பதிலடி கொடுத்தது.
போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் இவ்வாறு வளைகுடா முழுவதும் மறைமுக மோதல்களும் தாக்குதல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவுடன் தற்போது எந்த அணுசக்திப் பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தின் விவரங்கள் குறித்து அமெரிக்காவுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், நடந்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதே ஈரானின் உடனடி முன்னுரிமை என்றும் கூறியுள்ளார்.
அணுசக்தி விவகாரங்கள் தொடர்பாக எப்போது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். அணுசக்தி ஆவணத்தின் விவரங்கள் குறித்து எவ்வித பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை. என்றும் அவர் கூறியுள்ளார்.

