ஈரானில் சிக்கிய அமெரிக்க அதிகாரி.. 150+ விமானங்களுடன் நடந்த Rescue Operation!
செய்தியாளர்: எம்.மீரா
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரில், முன்னதாக அமெரிக்காவின் F-15E Strike Eagle என்ற போர் விமானத்தை ஈரான் வான் படை குழு சுட்டு வீழ்த்தியது. அதில் இருந்த இரண்டு விமானிகளும் தனித்தனியாக தரையிறங்கிய நிலையில், ஒரு விமானி மீட்கப்பட்டதாக கூறியிருந்த அமெரிக்கா, மற்றொருவரை மீட்கும் பணியில் ஈடுபட்டது.
ஈரானின் மலைப்பகுதியில் சிக்கிய அந்த அமெரிக்க விமானப்படை அதிகாரியை மீட்க, அமெரிக்க ராணுவம் மேற்கொண்டதாகக் கூறப்படும் அதிரடி மீட்பு நடவடிக்கை குறித்த பரபரப்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதுகுறித்த வீடியோவில், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், எதிரி நாட்டின் எல்லைக்குள் சுமார் 48 மணி நேரம் உயிருக்குப் போராடிய அதிகாரியை, மிகப்பெரிய ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு அமெரிக்கப் படைகள் மீட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலைப்பகுதியில் சிக்கிய ‘Bravo’ என்று அழைக்கப்படும் Weapon Systems Officer-ன் நிலை மிகவும் மோசமானதாகவும், அவருடைய பாரசூட் சேதமடைந்திருந்ததால் அவருக்கு முதுகெலும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், இருந்தபோதிலும், அவர் சுமார் 7,000 அடி உயரமுள்ள மலைப்பகுதிக்குச் சென்று, மீட்புப் படைகள் வரும் வரை அங்கு பதுங்கியிருந்ததாக வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுமார் 48 மணி நேரத்துக்குப் பிறகு, இரண்டு அமெரிக்க சிறப்பு மீட்புப் படையினர் மலைப்பகுதிக்குள் சென்று Bravo-வை கண்டுபிடித்தத காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. நகரமுடியாத நிலையில் இருந்த அவரைப் பாதுகாப்பாக தூக்கிச் சென்று ஹெலிகாப்டரில் ஏற்றிய காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த மீட்பு நடவடிக்கை, பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 150-க்கும் மேற்பட்ட விமானங்கள், 64 போர் விமானங்கள், 4 குண்டுவீச்சு விமானங்கள், 48 எரிபொருள் நிரப்பும் டேங்கர்கள் மற்றும் 13 மீட்பு விமானங்கள் உள்ளிட்டவை இதில் பயன்படுத்தப்பட்டதாக வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானியப் படைகளைக் குழப்புவதற்காக பல்வேறு இடங்களில் போலியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இரண்டு MC-130J விமானங்கள் மணலில் சிக்கியதால், அவை எதிரிகளின் கைகளில் சிக்காமல் இருக்க அமெரிக்கப் படைகளாலேயே அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மூன்று சிறப்பு ஹெலிகாப்டர்கள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு, ரேடார்கள் பொருத்தப்பட்ட 10 நிமிடங்களுக்குள் இயக்கத் தயாரானதாகவும் வீடியோ கூறுகிறது.
இவ்வாறு, எதிரி நாட்டின் மண்ணில் காயங்களுடன் இரண்டு நாட்கள் உயிர் தப்பியிருந்த அமெரிக்க அதிகாரியை மீட்க, மிகப்பெரிய அளவிலான திட்டமிடலும் ராணுவ ஒருங்கிணைப்பும் பயன்படுத்தப்பட்டதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

