US, கனடா வேண்டாம்.. 86,000 கிலோ தங்கத்திற்காக பிரிட்டனை தேர்வுசெய்த நெதர்லாந்து!
மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழல் ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் அமெரிக்கா மற்றும் கனடா இடையே வணிகப் போர் மூண்டு வருகிறது. இப்படியான புவிசார் அரசியல் காரணங்களால், நெதர்லாந்தின் மத்திய வங்கி அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. நெதர்லாந்தின் மத்திய வங்கியான 'டி நெதர்லான்ட்ஸே பேங்க்' (De Nederlandsche Bank - DNB), தனது 86,000 கிலோ (86 டன்) தங்க இருப்பை அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து லண்டனில் உள்ள 'பேங்க் ஆஃப் இங்கிலாந்து'க்கு (Bank of England) மாற்றியுள்ளது.
உலக அளவில் அதிகரித்துவரும் அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்ளவும், கையிருப்பை அவசரகாலத் தேவைக்கு உடனடியாகப் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்தின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்வாயிலாக நெதர்லாந்தின் மொத்த தங்க இருப்பில் பிரிட்டனின் பங்கு 18.10 சதவீதத்தில் இருந்து 32.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. தவிர, இதன்மூலம் டச்சு தங்கம் அதிகம் சேமிக்கப்பட்டுள்ள இடமாக பிரிட்டன் மாறியுள்ளது. மேலும், உள்நாட்டு இருப்பு 30.80 சதவீதமாகவும், அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள இருப்பு தலா 18.50 சதவீதமாகவும் உள்ளதாக அவ்வங்கி தெரிவித்துள்ளது.
இந்த தொடரையும் படிக்க: நிறம் மாறும் சினிமா - 7 | அண்ணா – கலைத்துறையில் தம்பிகளை உருவாக்கிய தளபதி!

