\
benjamin netanyahu
benjamin netanyahureuters

நெதன்யாகுவுக்கு செக்.. ஆட்சியைக் கையில் எடுத்த அரபு கட்சிகள்.. மாற்றத்துக்கு தயாராகும் இஸ்ரேல்!

இஸ்ரேலில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அணியோ அல்லது எதிர்க்கட்சியோ அரசாங்கத்தை அமைக்கத் தேவையான 61 இடங்களைப் பெறவில்லை. இதனால், அங்கு ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
Published on: 

இஸ்ரேலில் 120 உறுப்பினர்களைக் கொண்ட நெசெட் (Knesset) நாடாளுமன்றத்திற்கு கடந்த 27ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்குப் பிறகு இந்தத் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவை என்கிற நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி மற்றும் மதவாதக் கூட்டணிக் கட்சிகள் ஒருபுறமும், எதிர்க்கட்சிகள் மறுபுறமும் களமிறங்கின. இந்த நிலையில், இறுதித் தேர்தல் முடிவுகளின்படி, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அணியோ அல்லது எதிர்க்கட்சியோ அரசாங்கத்தை அமைக்கத் தேவையான 61 இடங்களைப் பெறவில்லை.

Benjamin Netanyahu
Benjamin NetanyahuReuters

சிஎன்என் தகவலின்படி, 120 உறுப்பினர்களைக் கொண்ட நெசெட்டில் நெதன்யாகுவின் வலதுசாரி அணி 53 இடங்களையும், மிதவாத யஷார் கட்சித் தலைவர் காடி ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி 48 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. மீதமுள்ள 19 இடங்களை அரபு தலைமையிலான கட்சிகள் வென்றுள்ளன. முந்தைய நாடாளுமன்றத்தில் அவற்றின் பலம் 10 இடங்களாக இருந்தது. இது இஸ்ரேல் அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் இஸ்ரேல் அரசியல் நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டுள்ளது. தேர்தல் முடிவுகளால் நாட்டில் தொங்கு நாடாளுமன்றம் உருவாகியுள்ளதுடன், அடுத்த அரசாங்கத்தை அமைப்பதில் அரபு நாடுகள் தலைமையிலான கட்சிகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

benjamin netanyahu
61 இடங்களைப் பெறாத நெதன்யாகு? இஸ்ரேலில் இழுபறி.. ஆட்சியமைப்பதில் சிக்கல்.. அடுத்து என்ன நடக்கும்?

இருப்பினும், மற்ற கட்சிகளின் ஆதரவைத் தக்கவைத்துக்கொண்டு, அரபு கட்சிகளின் ஆதரவைப் பெறும் எதிர்க்கட்சியின் திறன் நிச்சயமற்றதாகவே உள்ளது. எதிர்க்கட்சிகள் அரபுக்கட்சிகளின் ஆதரவைப் பெறும் நிலையில், அது ஆட்சியமைக்க பெரும்பான்மை இலக்கைவிட 6 இடங்கள் அதிகமாக இருக்கும். ஆனால், அரபு கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது குறித்து எதிர்க்கட்சி அணிக்குள்ளேயே நிலவும் கருத்து வேறுபாடுகளைக் கருத்தில்கொண்டால், அத்தகைய ஓர் ஏற்பாடு அரசியல் ரீதியாக சவாலானதாக இருக்கும். அரபு கட்சிகளின் ஆதரவை ஏற்றுக்கொள்வது தொடர்பாக எதிர்க்கட்சியில் உள்ள காடி ஐசன்கோட், முன்பு தயக்கம் தெரிவித்திருந்தார். அதேபோல், நஃப்தாலி பென்னட்டும், அவிக்டோர் லிபர்மேனும் அரபு கட்சிகளைச் சார்ந்த ஆட்சியமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Benjamin Netanyahu
Benjamin NetanyahuReuters

அதேநேரத்தில், அரபு கட்சிகளுடன் இணைந்து மாற்று அரசு அமைக்க வேண்டும் என்று யாயிர் கோலன் வலியுறுத்துகிறார். மேலும் Ra’am கட்சியின் தலைவர் மன்சூர் அப்பாஸ் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். Joint List கட்சியும் அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலிக்கலாம் எனக் கூறியுள்ளது. இதனால், ஐசன்கோட் தலைமையில் புதிய அரசு அமைய வாய்ப்புள்ளது. எதிர்க்கட்சிகளும் அரபு கட்சிகளும் உடன்பாடு ஏற்படுத்தினால் ஐசன்கோட் பிரதமராகப் பொறுப்பேற்க வாய்ப்புள்ளது. அரபு கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெறாமல் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கவும் முடியும். ஒருவேளை, இது நிறைவேறாமல் போனால் நெதன்யாகு மீண்டும் ஆட்சியமைக்கலாம்; எதிர்க்கட்சிகளில் உள்ள சில உறுப்பினர்களைத் தனது பக்கம் இழுத்து, புதிய கூட்டணியை உருவாக்க நெதன்யாகு முயற்சி செய்யலாம் அல்லது எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தேசிய ஒற்றுமை அரசு அமைக்கும் வாய்ப்பும் உள்ளது. இதுவும் நிகழாமல் போனால், அதாவது எந்தத் தரப்பாலும் ஆட்சியமைக்க முடியாவிட்டால் இஸ்ரேல் மீண்டும் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இதற்கு முன்பும் 2019 முதல் 2022 வரை இஸ்ரேல் ஐந்து முறை தேர்தலைச் சந்தித்துள்ளது.