61 இடங்களைப் பெறாத நெதன்யாகு? இஸ்ரேலில் இழுபறி.. ஆட்சியமைப்பதில் சிக்கல்.. அடுத்து என்ன நடக்கும்?
இஸ்ரேலில் 120 உறுப்பினர்களைக் கொண்ட நெசெட் (Knesset) நாடாளுமன்றத்திற்கு கடந்த 27ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்குப் பிறகு இந்தத் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவை என்கிற நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி மற்றும் மதவாதக் கூட்டணிக் கட்சிகள் ஒருபுறமும், எதிர்க்கட்சிகள் மறுபுறமும் களமிறங்கின. இந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், இதுவரை எந்தவொரு கூட்டணிக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மையான 61 இடங்கள் இன்னும் உறுதியாகக் கிடைக்கவில்லை. இதனால் ஆட்சியமைப்பதில் கடுமையான இழுபறி நிலை நீடிக்கிறது.
பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட்டணி தற்போது வரை சுமார் 54 இடங்கள் பெற்று ஒட்டுமொத்தமாக முன்னணியில் உள்ளது. நெதன்யாகுவின் லிகுட் (Likud) கட்சியே நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. மறுபுறம், எதிர்க்கட்சிகள் சுமார் 49 இடங்களைப் பெற்றுப் பின்தங்கியுள்ளது. அரபு கட்சிகள் சுமார் 17 இடங்கள் பெற்று முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இதையடுத்து, நெதன்யாகு தனது பாரம்பரியக் கூட்டணிகளான தீவிர வலதுசாரி மற்றும் யூத மதவாதக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க முயல்கிறார். எனினும், 61 இடங்களை எட்ட இன்னும் 6 முதல் 7 இடங்கள் தேவைப்படுவதால், பிற கட்சிகளின் ஆதரவு அல்லது அதிருப்தி உறுப்பினர்களை இழுக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது. அதேநேரத்தில், முழுமையான பெரும்பான்மையைப் பெறத் தவறியுள்ள எதிர்க்கட்சி கூட்டணித் தலைவரான பென்னி கான்ட்ஸ் தனது அணியின் வலுவான செயல்பாட்டைக் கொண்டாடியுள்ளார்.
மக்கள் நெதன்யாகுவை நிராகரித்துவிட்டதாகவும், அவர் பதவி விலக வேண்டும் என்றும் அறிவித்துள்ளார். இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வலதுசாரி அணியின் செயல்பாட்டிற்குத் தானே காரணம் என்று உரிமை கோரியதோடு, தனது ஆதரவாலேயே நெதன்யாகு வெற்றி பெற்றதாகத் தெரிவித்துள்ளார். ஒருவேளை, எதிர்க்கட்சிக் கூட்டணி ஆட்சியமைக்க வேண்டுமானால், அவர்களுக்கு அரபு கட்சிகள் மற்றும் சிறிய பிராந்தியக் கட்சிகளின் நிபந்தனையற்ற ஆதரவு கட்டாயம் தேவைப்படும். ஆனால், கொள்கை வேறுபாடுகள் காரணமாக இத்தகைய பரந்த கூட்டணியை உருவாக்குவது மிகவும் சவாலானது.

