இனி ஈரானால் எங்களை மிரட்ட முடியாது: வளைகுடா நாடுகளின் மெகா திட்டம்|கச்சா எண்ணெய் பிரச்னைக்கு தீர்வு?
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் காரணமாக ஈரான் ஹார்முஸ் நீரிணையை முடக்கியது. கத்தார், குவைத், ஈராக், ஐக்கிய அரபு நாடுகள், சவூதி அரேபியா ஆகிய முக்கிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் ஹார்முஸ் நீரிணை வழியாகவே தங்கள் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்த நிலையில், ஈரானின் இந்த நடவடிக்கையால் அந்த நாடுகளின் ஏற்றுமதி முற்றிலும் முடங்கியது.
இதன் காரணமாக அந்த நாடுகளுக்கு பல பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவு நஷ்டம் ஏற்பட்ட நிலையில், கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு வேறு வழிகளை தேடினர். அந்த வகையில் ஈரானின் இந்த நடவடிக்கை காரணமாக சவுதி அரேபியா கிழக்குப் பகுதியில் உள்ள தனது எண்ணெய் வயல்களிலிருந்து, நாட்டின் குறுக்காகச் சுமார் 1,200 கிலோமீட்டர் தூரத்திற்கு செங்கடலில் உள்ள யான்பு (Yanbu) துறைமுகம் வழியே தனது கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய புதிய எண்ணெய் குழாய்களை (East-West Pipeline / Petroline) அமைக்க சவூதி வேகம் காட்டி வருகிறது.
அதேபோல, ஐக்கிய அரபு அமீரகமும் புஜைரா துறைமுகம் மூலம் ஓமன் வளைகுடா வழியே ஹப்ஷான் - புஜைரா குழாய் ((Habshan–Fujairah Pipeline)) பாதையை அமைத்து வருகிறது. புஜைரா (Fujairah ) துறைமுகத்தில் மலையைக் குடைந்து சுமார் 4.2 கோடி பீப்பாய்கள் கச்சா எண்ணெயைச் சேமித்து வைக்கும் பிரம்மாண்ட நிலத்தடி சேமிப்புக் கிடங்குகளையும் அமீரகம் உருவாக்கியுள்ளது. இந்த இரண்டு வழித்தடமும் தற்போது முழுமையாக செயல்பாட்டுக்கு வராத நிலையில், விரைவில் முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டுவர பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல ஈரானும் தெற்கு ஈராக்கின் பாஸ்ரா பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான டேங்கர் லாரிகள் மூலம் சிரியாவின் பனியாஸ் (Baniyas) துறைமுகத்திற்கு எண்ணெயை கொண்டு சென்று அங்கு இருந்து மத்திய தரைக்கடல் வழியாக கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் திட்டத்தை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தப் போக்குவரத்துக்காகத் தற்போது சுமார் 6,000 டேங்கர் லாரிகள் பயன்படுத்தப்படும் நிலையில், இதனை விரைவில் 10,000 லாரிகளாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இராக்கில் இருந்து சிரியாவின் பனியாஸ் துறைமுகத்தை அடையும் கச்சா எண்ணெய், அங்கிருந்து கப்பல்கள் மூலம் கிரீஸ், இத்தாலி மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள மத்தியதரைக் கடல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் வரும் காலங்களில் ஹார்முஸ் நீரிணையை ஈரான் தடுத்தாலும் இந்த நாடுகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு வராத நிலை ஏற்பட்டுள்ளது.

