\
Nepal's Gen Z Sparks Fresh Protests Against Balen Shah
நேபாள பிரதமர் பாலேந்திர ஷாPt web

நேபாளத்தில் மீண்டும் போராட்டம்.. பாலேந்திர ஷாவுக்கு நெருக்கடி.. Gen Z கொந்தளிப்புக்கு காரணம் என்ன?

நேபாளத்தில் முன்னாள் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலிக்கு எதிராக போராடி ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திய Gen Z இளைஞர்களே, தற்போது அவர்கள் தேர்ந்தெடுத்த பிரதமர் பலேந்திரா ஷாவுக்கு எதிராக மீண்டும் தெருக்களில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
Published on

கடந்த 2025-ம் ஆண்டு நேபாளத்தில் அப்போதைய பிரதமர் கே.பி. ஷர்மா ஒலிக்கு எதிராக Gen Z இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டத்தால் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் இளைஞர்களின் ஆதரவுடன் பிரதமர் பலேந்திரா ஷா தலைமையில் புதிய அரசு அமைந்திருக்கிறது. இந்தச் சூழலில் தான், அவருக்கு ஆதரவளித்த இளைஞர்களே அவரது அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். இந்தப் போராட்டத்துக்கு முக்கியக் காரணமாக இருப்பது, காவல்துறையினருடனான மோதலில் 25 வயது இளைஞரான கணேஷ் நேபாளி தீக்குளித்து இறந்தது தான்.

பள்ளிப்படிப்பை முடித்துள்ள கணேஷ் நேபாளி, அரசுப் பணிக்காக படித்துக் கெண்டே காத்மாண்டுவில் பகுதி நேர பைக் ஓட்டுநர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் அவரது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவருக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த அவர், நேற்று முன்தினம் (ஞாயிற்றுக் கிழமை) பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு தீக்குளித்தார். இதனையடுத்து, 60 சதவீத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அந்நாட்டு இளைஞர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கிடையில், காத்மாண்டுவில் ஆற்றங்கரையோரம் வசித்து வந்த நிலமற்ற ஏழை மக்களை மாற்று வசதி ஏற்பாடு செய்யாமல் வெளியேற்றிய அரசின் நடவடிக்கையும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தது. இதனால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்ததுடன், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு, கணேஷ் நேபாளியின் மரணம் மற்றும் இந்தக் குடியிருப்பு அகற்றும் நடவடிக்கை ஆகிய இரண்டும் இணைந்து, பலேந்திரா ஷா அரசுக்கு எதிரான இளைஞர்களின் அதிருப்தியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

இதையடுத்து, காத்மாண்டு உள்ளிட்ட நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வீதிகளில் இறங்கி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கணேஷ் நேபாளியின் மரணத்துக்கு நீதி வழங்க வேண்டும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நிலமற்ற மக்களை வெளியேற்றிய அரசின் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

தற்காலிக முகாம்களில் உள்ள ஏழைகளின் நிலையை ஆய்வு செய்யச் சென்ற இளைஞர் நல ஆர்வலர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி 20-க்கும் மேற்பட்டோரைக் காவல்துறை கைது செய்திருக்கிறது. இந்த விவகாரங்கள் குறித்து விசாரிக்க நேபாள அரசு, 5 பேர் கொண்ட உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்திருக்கிறது. இளைஞர்களின் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், நேபாள அரசியலில் மற்றொரு ஆட்சிமாற்றத்துக்கு வழிவகுக்குமா, அல்லது அரசின் செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Nepal's Gen Z Sparks Fresh Protests Against Balen Shah
’இனி 20% கட்டணம்’.. ஹார்முஸ் ஜலசந்தியில் அதிரடி காட்டும் ட்ரம்ப்.. ஈரானுக்குப் பின்னடைவு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com