பதைபதைக்க வைக்கும் நேபாள பெருவெள்ளம்.. 57 தமிழர்களின் நிலை என்ன?
நேபாளம் திபெத் எல்லைப் பகுதியில் வடக்கு ராசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோஷி ஆற்றில் இன்று காலை 8.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில், வீடுகள், சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்மின் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. குறிப்பாக, ரசுவா பகுதியில் பனி சூழ்ந்த ஏரி உருகி, மொத்தமாக நீர் வெளியேறியதால் வெள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வெள்ளத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 22-ஆக தற்போது அதிகரித்திருக்கிறது. மேலும் பலர் மாயமாகியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே, நேபாள சுற்றுலா வாரியம் வெள்ளத்தில் காணாமல் போனோர் குறித்தான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற இந்தியர்களில் 105 பேர் இந்த பெருவெள்ளத்தில் சிக்கி மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 384 சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது.
இதற்கிடையில், புனிதப் பயணத்திற்காக நேபாளம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 57 தமிழர்கள்காத்மாண்டுவிலிருந்து சுமார் 150 கி.மீ வடக்கே உள்ள திமுரே பகுதியில் இந்த பக்தர்கள் சிக்கியுள்ளனர் என்ற அதிர்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. இவர்கள் கடந்த 23-ம் தேதி தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேபாளம் மற்றும் திபெத்திற்கு 57 பயணிகள் சுற்றுலா சென்றதாகவும், அப்போது தான் வெள்ளப்பெருக்கில் சிக்கியிருப்பதாகவும் சம்பந்தப்பட்ட சுற்றுலா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
மேலும், 3 பேருந்துகளில் இவர்கள் சுற்றுலா சென்ற நிலையில், ஒரு 20 பேர் தொடர்பு கொண்டிருக்கின்றனர். மற்ற 2 பேருந்துகளில் இருந்த 37 பேரின் நிலை என்ன என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களின் நிலை குறித்து அறிய தமிழக அரசின் அயலகத் தமிழர் துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தான், மாயமான இந்தியர்கள் உள்ளிட்ட அனைவரையும் மீட்கும் பணியில் நேபாள காவல்துறையினர், மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். எனினும், நேபாளத்தில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து உறவினர்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

