306 ஆண்டுகால சாதனை முறியடிப்பு.. உலகின் மிக இளம்வயது பேராசிரியர்.. யார் இந்த நேத்தன் தாமஸ்?
பள்ளிப்படிப்பை முடித்து எல்லா மாணவர்களும் அடுத்தகட்டமாக கல்லூரிக்குச் செல்வர். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் இளைஞர் அந்த வயதில், கல்லூரி ஒன்றில் பேராசிரியராகி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். அதிலும், 306 ஆண்டுகால உலக சாதனையை அவர் முறியடித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த நேத்தன் தாமஸ் (Nathan Thomas). 18 வயது இளைஞரான இவர், உலகின் மிக இளைய ஆண் பேராசிரியர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்து உலகைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். அவர், ஆகஸ்ட் 2023-இல் பேராசிரியராகப் பணியில் சேர்ந்த நிலையில், கின்னஸ் உலக சாதனை அமைப்பு இதற்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி டேட் கல்லூரியில் பொறியியல் மாணவர்களுக்கு 'C' ப்ரோக்ராமிங் பாடம் கற்பித்து வருகிறார். தனது 10-ஆவது வயதிலேயே 'இரட்டை சேர்க்கை' முறையில் பள்ளிப் படிப்போடு மியாமி டேட் கல்லூரியிலும் பாடங்களைப் படிக்கத் தொடங்கிய அவர், 14-ஆவது வயதில் புளோரிடா சர்வதேசப் பல்கலைக்கழகத்தில் (FIU) சேர்ந்தார்.
16-ஆவது வயதில் மின் பொறியியலில் இளங்கலை பட்டமும், 18-ஆவது வயதில் அதே துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். மேலும், பட்டம் பெற்ற கையோடு, தாம் முதலில் படித்த மியாமி டேட் கல்லூரியிலேயே பேராசிரியராகப் பணியில் இணைந்தார். தற்போது பேராசிரியராகப் பணியாற்றி வரும் நேத்தன், மியாமி பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் (University of Miami School of Law) சட்டக் கல்வியும் பயின்று வருகிறார்.
பொறியியல் அறிவை அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்துடன் இணைத்துச் செயல்படுவதை தனது எதிர்கால இலக்காகக் கொண்டுள்ளார். பேராசிரியராகச் சேர்ந்தது குறித்து நேத்தன் தாமஸ், "வகுப்பறைக்குள் நுழைந்துவிட்டால், அனைவரும் கற்பதற்காகவே வந்துள்ளோம். அங்கு வயது ஒரு தடையில்லை. எனது நோக்கம் மாணவர்களுக்குச் சரியாகக் கற்பிப்பதும், கற்பதில் அவர்களுக்கு உதவுவதும் மட்டுமே" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கணிதவியலாளர் கோலின் மெக்லாரின் (Colin Maclaurin) என்பவர் 1717-ஆம் ஆண்டு தனது 19-ஆவது வயதில் பேராசிரியராகி இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை, கிட்டத்தட்ட 306 ஆண்டுகளுக்குப் பிறகு நேத்தன் தாமஸ் முறியடித்துள்ளார். மேலும், கடந்த 2008-ஆம் ஆண்டு, 18 ஆண்டுகள் 362 நாட்களில் மிக இளைய பெண் பேராசிரியரான அலியா சபூர் (Alia Sabur) என்பவரைவிட நேத்தன் 16 நாட்கள் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. விடாமுயற்சியும் கற்றல் மீதான பேரார்வமும் குறையாது இருந்தால், ஒரு மனிதனை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதற்கு நேத்தன் தாமஸே உதாரணமாகத் திகழ்ந்துள்ளார்.

