இஸ்ரேல் - ஹமாஸ் படையினர் இடையேயான போர் 8ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில், இதுவரையில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இஸ்ரேலில் ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோரும், காசாவில் சுமார் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே, வடக்கு காசாவில் உள்ள மக்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.
எனினும் அவர்களை ஹமாஸ் படையினர் தடுப்பதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, இஸ்ரேல் விடுத்த 24 மணி நேர கெடு முடிவுக்கு வருவதால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த கெடுவுக்கு பிறகு இஸ்ரேல் படைகள் தரைவழி தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதா என்ற பரபரப்பும் நிலவி வருகிறது. காசாவில் பதுங்கியுள்ள ஹமாஸ் படையினரை அழிக்கும் வரை தங்கள் தாக்குதல் தொடரும் என்றும் இஸ்ரேல் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாசா விஞ்ஞானி ஒருவர் தன்னுடைய பெற்றோர் காசாவில் இருப்பது குறித்த பதிவொன்றை பதிவிட்டுள்ளார். நாசா விஞ்ஞானியான லோய் எல்பேஸ்யூன் கூறுகையில், “ஜெர்மன் குடியுரிமை பெற்றுள்ள என் பெற்றோர் காஸாவில் இருக்கின்றனர். ஆனாலும் தண்ணீர், மின்சாரம் உணவு கிடைக்காமல் காஸாவில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக பீட் ஹனூவை விட்டு வெளியேறிய அவர்கள், இப்போது மற்றொரு வெளியேற்றும் உத்தரவை எதிர்பார்த்து காஸாவில் உள்ளனர். அவர்கள் செல்வதற்கு வேறு இடங்கள் இல்லை, இதனால் காஸாவில் தங்குவதற்கான முடிவை எடுத்துள்ளனர்.
சாலைகளில் தங்களது உயிரை பணயம் வைப்பதை விட தங்கள் வீட்டில் மரியாதையுடன் இறப்பது சிறந்தது என அவர்கள் நம்புகிறார்கள்” என தெரிவித்துள்ளார். இச்செய்தியை பாலஸ்தீன ஏதிலிகளுக்கான UN பக்கம் பகிர்ந்திருக்கிறது.