நாசாவின் 2,145 சீனியர் அதிகாரிகளுக்கு செக்! பணிநீக்க நடவடிக்கையில் ட்ரம்ப் நிர்வாகம்!
நாசாவில் 2,145 மூத்த ஊழியர்கள் பணி நீக்கம்
நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேசன் (NASA) என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் விண்வெளி அமைப்பு, நிலவில் மனிதர்களுக்கு அனுப்புவது, செவ்வாயில் விண்கலம் மற்றும் ரோபோக்களை தரை இறக்குவது, செயற்கைகோள் அனுப்புவது உள்ளிட்ட மகத்தான பணிகளைச் செய்துவருகிறது. 60 ஆண்டுகளுக்கு மேலாக சிறந்து விளங்கும் இவ்வமைப்பில் விஞ்ஞானிகளும், பொறியியலாளர்களும், மூத்த அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றுள்ள ட்ரம்ப், அந்நாட்டில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் அரசின் பணி நீக்க நடவடிக்கைகளும் அடக்கம். அந்த வகையில், அடுத்து ட்ரம்ப் நிர்வாகம் நாசாவில் பணியாற்றும் மூத்த அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகத்தில் சுமார் 2,145 மூத்த ஊழியர்கள் மற்றும் பணியாளர்களைப் பணிநீக்கம் செய்ய ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், ’பணி நீக்கம் செய்யப்படவுள்ள 2,145 ஊழியர்களில் 875 GS-15யிலான பதவிகளில், மூத்த நிலை அரசாங்க பதவிகளில் உள்ளவர்கள் ஆவர். அவர்கள் ஏஜென்சியின் மிகவும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள். அவர்களில் 1,800க்கும் மேற்பட்டோர் நாசாவின் முக்கிய பணிப் பகுதிகளான அறிவியல், பொறியியல் மற்றும் மனித விண்வெளிப் பயணத்தில் நேரடியாகப் பணியாற்றுகிறார்கள். மீதமுள்ளவர்கள் ஐடி மற்றும் நிதி போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளில் பணிபுரிகின்றனர். இத்தகைய மிகவும் திறமையான நபர்களின் இழப்பு நாசாவின் நீண்டகால திறன்களை கணிசமாக பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்காவுக்குப் பாதிப்பு எச்சரிக்கும் வல்லுநர்கள்!
மேலும், நாசாவின் 10 பிராந்திய மையங்களிலும் பணியாளர் குறைப்பு பரவியுள்ளது. மேரிலாந்தில் உள்ள கோடார்ட் விண்வெளி விமான மையம் 607 ஊழியர்களைவிட்டு வெளியேறி அதிக இழப்பை எதிர்கொள்கிறது. டெக்சாஸில் உள்ள ஜான்சன் விண்வெளி மையம் 366 பேரையும், புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையம் 311 பேரையும், வாஷிங்டனில் உள்ள நாசா தலைமையகம் 307 பேரையும் வெளியேற்றுகிறது. இந்த மையங்கள் மிஷன் கட்டுப்பாடு முதல் ராக்கெட் ஏவுதல் வரையிலான செயல்பாடுகளுடன் ஒருங்கிணைந்தவையாகும். இந்த ஆட்குறைப்புகள், நாசாவின் பணியாளர்களை 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்களால் குறைக்கும் நோக்கில் ட்ரம்ப் முன்மொழியப்பட்ட பட்ஜெட்டுடன் ஒத்துப்போகின்றன. இந்த ஆட்குறைப்பு எதிர்காலத்தில் அமெரிக்காவைத் தடம்புரளச் செய்யலாம். அத்துடன், அமெரிக்கா தனது விண்வெளித் தலைமையை சீனாவிடம்கூட விட்டுக் கொடுக்கும் அபாயம் நேரிடலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். காரணம், விண்வெளி ஆராய்ச்சியில் சீனா தொடர்ந்து முன்னேறி வருகிறது.
இதற்கிடையே, நாசாவின் அறிவியல் மிஷன் இயக்குநரகத்தின் ஏழு முன்னாள் இயக்குநர்கள், அறிவியல் திட்டங்களுக்கான 47% பட்ஜெட் குறைப்புக்கு பகிரங்கமாக கண்டனம் தெரிவித்துள்ளனர். எனினும், இந்தத் துறைக்கு பட்ஜெட் அதிகமாக ஒதுக்கப்பட்டாலும், இழந்த செயல்பாடுகளை மீண்டும் ஈர்ப்பது போட்டி நிறைந்த விண்வெளித் துறையில் ஒரு சவாலாக இருக்கும் என வல்லுநர்கள் குறிப்பிடுகின்றன’ என அந்தச் செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, எலான் மஸ்க்குடனான உறவின் விரிசல் காரணமாக, தமக்கு நெருங்கிய நண்பரான நாசாவின் செனட்டாக இருந்த ஜாரெட் ஐசக்மேனை, அந்தப் பதவியிலிருந்து ட்ரம்ப் ராஜினாமா செய்யவைத்தார். இன்னும் அந்தப் பதவியில் எவரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.