”இந்தியாவுக்கு என்ன நாடு கடத்தாதீங்க” மும்பை தாக்குதல் குற்றவாளியின் கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், கடந்த 2008ஆம் ஆண்டு மும்பை நகருக்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் தாஜ் ஓட்டல், ஒபேராய் ஓட்டல், நரிமன் இல்லம், சிஎஸ்எம்டி ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்தில் அமெரிக்கர்கள் 6 பேர் உள்பட 166 பேர் பலியானார்கள். எனினும் இத்தாக்குதலில் ஈடுபட்ட 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதில், அஜ்மல் கசாப் என்ற ஒரு தீவிரவாதி மட்டும் பிடிபட்ட நிலையில், பின்னர் அவனுக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. உலகையே திரும்பிப் பார்க்கவைத்த இந்தச் சம்பவத்தில், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவரும் கனடா குடியுரிமை பெற்றவருமான தஹாவூர் உசேன் ராணா, தீவிரவாதி டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2009ஆம் ஆண்டு அமெரிக்க போலீசரால் கைது செய்யப்பட்ட அவர், அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்காவிடம் மத்திய அரசு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்பை, இந்திய பிரதமர் மோடி கடந்த மாதம் போய்ச் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து மோடியுடனான சந்திப்பின்போது ட்ரம்ப், “2008 மும்பை தாக்குதலுக்கு சதி செய்த தஹாவூர் ராணாவை நாடு கடத்த நான் உத்தரவிட்டுள்ளேன். இந்தியாவில் ராணா நீதியின் முன் நிறுத்தப்படுவார்” என்றார். அவருடைய இந்த உத்தரவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
இந்த நிலையில், ”இந்தியாவுக்கு என்னை நாடு கடத்தக்கூடாது” என்று கோரி, ராணா தரப்பில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "என்னை நாடு கடத்துவது என்பது அமெரிக்க சட்டங்களுக்கு எதிரானது. முக்கியமாக சித்திரவதைகளுக்கு எதிரான அமெரிக்க விதிகள் மீறப்பட வாய்ப்புள்ளது. ஏனெனில், மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாகிஸ்தான் வம்சாவளி முஸ்லிம் என்பதால் என்னை, இந்தியாவில் கொடுமைப்படுத்த வாய்ப்புள்ளது. மேலும், எனக்கு தீவிரமான உடல்நலப் பிரச்னைகளும் உள்ளன. இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் மருத்துவ உதவிகள் மறுக்கப்படும். இது மரண தண்டனைக்கு நிகரானது” என அதில் கோரியிருந்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது மனுவை நிராகரித்துள்ளது.
முன்னதாக, ராணாவை நாடு கடத்தக் கோரி இந்தியா சார்பில் அமெரிக்காவின் கீழ் நீதிமன்றங்களில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் ரானாவை நாடுகடத்த பச்சைக்கொடி காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.