வங்கதேசம் | 2026 ஏப்ரல் பொதுத் தேர்தல்.. இடைக்கால தலைவர் அறிவிப்பு!
அண்டை நாடான வங்கதேசத்தில், மாணவர்களின் போராட்டத்திற்குப் பிறகு தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. இதற்கிடையே, ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை மற்றும் ஊழல் வழக்கு வங்காளதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக கைது வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருடைய கட்சிக்கு, அந்நாட்டு இடைக்கால அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், 2026-ஆம் ஆண்டு ஏப்ரலில் தேர்தல் நடத்தப்படும் என இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதுகுறித்து அவர், ”அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் எந்த நாளிலும் தேர்தல் நடைபெறும் என்பதை குடிமக்களுக்கு அறிவிக்கிறேன். தேர்தல் ஆணையம் அதற்கான அனைத்து அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்” என தெரிவித்தார்.
எனினும், இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. மத்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ருஹின் ஹொசைன் பிரின்ஸ், “ ஏப்ரல் மாதத்தில் தேர்தலை நடத்த யூனுஸ் ஏன் விரும்பினார் என்பது எங்களுக்குப் புரியவில்லை. 2025ஆம் ஆண்டுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நிச்சயமாகத் தேவை என்று நாங்கள் தெளிவாகக் கூறியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
”இடைக்கால அரசாங்கம் தேர்தலை தாமதப்படுத்த தந்திரங்களை நாடுகிறது” என்று பிஎன்பி தலைவர் ருஹுல் கபீர் ரிஸ்வி குற்றஞ்சாட்டியுள்ளார். அதுபோல், ”கொடுக்கப்பட்ட அரசியல் சூழ்நிலைகள், உள்ளார்ந்த குறைபாடுள்ள தேர்தல் சட்டங்கள் மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மை காரணமாக யூனுஸால் மிகவும் சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தலை நடத்த முடியாமல் போக வாய்ப்புள்ளது" என்று டாக்காவைச் சேர்ந்த ஆர்வலர் கல்வியாளர் ரெசௌர் ரஹ்மான் லெனின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜமாத்-இ-இஸ்லாமி வங்கதேசமும் அதன் மாணவர் பிரிவான சத்ரா ஷிப்பூரும் மீண்டும் தங்கள் அரசியல் அந்தஸ்தைப் பெற்றிருப்பதுடன் வரும் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக தேர்தல் ஆணையத்தில் பட்டியலிடவும் அனுமதித்துள்ளது. இது, நாட்டில் மாணவர் இயக்கத்தை பெரிய அளவில் எடுத்துச் சென்று, அரசியலில் மீண்டும் நுழைவதற்கு வழிவகுத்துள்ளது. இதனால்தான் வங்கதேசத்தில் உள்ள அரசியல் ஆய்வாளர்கள், மாணவர்களின் எழுச்சிக்குப் பின்னால் இருந்த ஜமாத்தின் ஆதரவுடன் யூனுஸ் ஆட்சிக்கு வந்தார் என்றும், அதே நேரத்தில் அவரது விமர்சகர்கள் ஜமாத்தின் ஆதரவுடன் அவர் தனது ஆட்சியை நீட்டிக்க விரும்புவதாகவும் வாதிடுகின்றனர். எனவே, தேர்தலை உடனே நடத்தாமல் அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ள யூனுஸ் விரும்புவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், டிசம்பரில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற பல கட்சிகள் வலியுறுத்தி வந்தன. தவிர, அந்நாட்டின் ஒரே பெரிய கட்சியான வங்கதேச தேசியக் கட்சி தேர்தலில் வெற்றி பெறும் சூழல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அவர், தேர்தலை அடுத்த ஆண்டு அறிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.