குவைத்: தீ விபத்தில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழப்பு.. தமிழர்களின் நிலை என்ன?
40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழப்பு
புதிய தலைமுறைக்காக ராஜ தேவேந்திரன்
தெற்கு குவைத்தின் மன்காஃப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள், 6 மாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியுள்ளனர். அதனைக் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரான கே.ஜி. ஆபிரஹாம் என்பவர் வாடகைக்கு எடுத்து நடத்தி வந்திருக்கிறார். அந்தக் குடியிருப்பில், கேரளா, தமிழ்நாடு மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்கள் தங்கியிருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான், செவ்வாய்க் கிழமை அதிகாலை 6 மணிக்கு, தரைத் தளத்தில் இருந்த சமையலறையில், திடீரென தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. கரும்புகையுடன் மளமளவென பரவிய தீயில், உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் சிக்கினர்.
அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 195 பேரில், 175 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நிலையில், பயங்கர தீ விபத்தில் சிக்கி 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலனோர் கேரளாவைச் சேரந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. விபத்தில், படுகாயமடைந்த 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழர்களின் நிலை?
குவைத் தீ விபத்து குறித்து ஆலோசனை கூட்டம் நடத்திய பிரதமர் மோடி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் நிதிஉதவி அறிவித்துள்ளார். விபத்தில் சிக்கிய இந்தியர்களுக்கு உதவுவதற்காக மத்திய இணை அமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் குவைத் விரைந்தார். இதேபோல், நோர்கா எனும் கேரளா அமைப்பும், இந்திய தூதரகமும் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.
தீ விபத்துக்கு, கட்டட உரிமையாளரின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது குறித்து விரிவான விசாரணை நடத்த, குவைத் அரசு உத்தரவிட்டு உள்ளது.
தீ விபத்து நடந்த குடியிருப்பில் வசித்ததாகக் கூறப்படும், வீராச்சாமி மாரியப்பன், சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, விஜயகுமார் பிரசன்னா, சிவசங்கர் கோவிந்தன், கருப்பண்ணன் ராமு, பிராங்க்ளின் கலைச்செல்வன் ஜேம்ஸ், ரிச்சர்ட் ராய், முகமது ஷரீப் உள்ளிட்ட தமிழர்களின் நிலை குறித்து தகவல் தெரியவில்லை.
ஊர், உறவைப் பிரிந்து பொருளீட்டச் சென்றவர்கள், திடீர் தீ விபத்தில் உயிரிழந்திருப்பதும், காயமடைந்திருப்பதும் அவர்களது உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.