துணை ராணுவ எழுச்சிக்கு காரணம்.. கொலம்பிய முன்னாள் அதிபர் குற்றவாளி என தீர்ப்பு!
கொலம்பியாவின் முன்னாள் அதிபர் அல்வாரோ யூரிப்பை லஞ்ச வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தென் அமெரிக்க நாட்டில் அதிபராக இருந்த ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்படுவது இதுவே முதன்முறை. அந்த வகையில், இந்தத் தீர்ப்பு கொலம்பிய அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் ஆதரவுடன் 2002 முதல் 2010 வரை ஆட்சி செய்த யூரிப், கொலம்பியாவில் சர்ச்சைக்குரிய நபராக கருதப்படுபவர்.
இடதுசாரி அமைப்பினர்களுக்கு எதிராக கடும் தாக்குதலை நடத்தியவர் யூரிப். 1990களில் துணை இராணுவக் குழுக்களின் எழுச்சிக்கு அவரே மூல காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் சாட்சியங்களைக் கலைக்க முயன்றதற்கான ஆதாரங்களை அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் சமர்பித்துள்ளனர். 73 வயதாகும் யூரிப்புக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அவர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.