அடுத்தடுத்து தாக்கும் இயற்கை! திடீரென வந்த நிலச்சரிவு! பயமுறுத்தும் பிரம்மாண்ட புழுதி!
நேபாளத்தில் கோர்க்கா மாவட்டத்தில் ஏற்பட்ட வறண்ட நிலச்சரிவு, மண் தன்மை மாற்றம் மற்றும் வறண்ட காலநிலை காரணமாக உருவாகி, பிரம்மாண்ட புழுதியை எழுப்பியது. இதனால் மக்கள் பாதுகாப்பு அச்சத்தில் உள்ளனர். இதுவரை உயிரிழப்புகள் இல்லை என தகவல்.
செய்தியாளர் - கார்த்திகேயன்
நேபாளம் என்றாலே இயற்கை பேரிடர்கள் அதிகம் நடக்கும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. பெருமளவு, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிகப்பட்ட இந்த நாட்டில், சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பெருவெள்ளம் உலகையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்படியான சூழ்நிலையில், இரு நிலச்சரிவுகள் ஒரு மாத இடைவெளியிலேயே ஏற்பட்டு, மக்களை அச்சுறுத்தியுள்ளது. அதாவது, நோபளத்தின் கோர்க்கா மாவட்டத்தில் உள்ள புதிகாண்டகி நதியில், கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி அன்று, மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு காரணமாக, புதிகாண்டகி நதியின் குறுக்கே, பாறைகள் விழுந்ததால், அதன் நீரோட்டம் தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டு, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் ஜகத் பாகர், சல்லேரி, கட்டிகொலா போன்ற பகுதிகளில், 40-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
இதுமட்டுமின்றி, சோதி, ஆருகாட் பகுதிகளில், முக்கிய மோட்டார் பாலங்கள், தொங்கு பாலங்கள் சேதம் அடைந்தன. இந்த சம்பவத்தின் தழும்பே இன்னும் குறையாத சூழ்நிலையில், தற்போது மற்றொரு பேரிடர் நேபாளத்தில் ஏற்பட்டு, பொதுமக்களை அச்சம் அடைய வைத்துள்ளது. கோர்க்கா மாவட்டத்தில் உள்ள தடோ பர்யாங் வனப்பகுதியில் வறண்ட நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வழக்கமான பருவமழை அல்லது வெள்ளப்பெருக்கு இல்லாமல், அப்பகுதியில் நிலவிய மண் தன்மையின் மாற்றம் மற்றும் வறண்ட காலநிலை காரணமாக திடீரென இந்த உலர் நிலச்சரிவு உருவாகியுள்ளது.
இதனால் பாறைகளும் மண்ணும் சரிந்து விழுந்தன. வழக்கமான நிலச்சரிவுகள் போல் வெள்ளத்தை ஏற்படுத்தாமல், இந்த வறண்ட நிலச்சரிவால், பிரம்மாண்டமான புழுதியும், தூசியும் எழுந்துள்ளது. உள்ளூர் நிர்வாகம் வழங்கியுள்ள தகவல்களின் படி, இந்த விபத்தில் இதுவரை யாரும் அதிர்ஷ்டவசமாக உயிரிழக்கவில்லை. வனப்பகுதியை இது தாக்கியுள்ளதால், உள்ளூர் மக்களிடையே பெரும் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சரிந்து விழுந்த மண் மற்றும் பாறைகள் புதிகாண்டகி நதியை அடைந்தாலும், நதியின் நீரோட்டத்திற்குப் பெரிய அளவில் தடை ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

