”பாகிஸ்தானில் எனக்கு மரண தண்டனை வழங்க முயற்சித்தார்கள்” - மார்க் ஜுக்கர்பெர்க் சொன்ன சம்பவம்!
ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் சிஇஓவாக இருப்பவர், மார்க் ஜுக்கர்பெர்க். இவர், பாகிஸ்தான் அரசு தனக்கு மரண தண்டனை விதிக்க முயன்ற சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இதுகுறித்து அவர், “பாகிஸ்தானில், ஒரு நபர் தவறான கன்டென்ட் பதிவேற்றம் செய்ததைத் தொடர்ந்து, ஃபேஸ்புக்கிற்கு எதிராகத் வழக்கு தொடரப்பட்டது. முகமது நபியின் தவறான படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டதை அடிப்படையாக கொண்டு இந்த வழக்கு என்மீது பதிவு செய்யப்பட்டது. ஃபேஸ்புக் தளத்தில் இப்புகைப்படத்தை பார்த்த மற்றொரு நபர் இந்தப் படம் தங்கள் கலாசாரத்தை அவமதிப்பதாகவும், இறை நிந்தனையாகக் (Blasphemy) கருதி வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்து ஃபேஸ்புக் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்ட பின்பு, புகைப்படத்தை பதிவு செய்தவருக்கு எதிராக தனிப்பட்ட முறையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் இந்தச் சம்பவம், என்னை மரண தண்டனை வரைக்கும் கொண்டு சென்றது. பாகிஸ்தானுக்கு நான் செல்லாத காரணத்தால் இந்த மரண தண்டனை வழக்கில் இருந்து தப்பித்தேன். உலகில் பல்வேறு நாடுகளில் கருத்துச் சுதந்திரம் என்பதற்கு வெவ்வேறான மதிப்பீடுகள் உள்ளன. அந்த அரசாங்கங்கள் எங்களை முடக்கவும், சிறையில் அடைக்கவும் நினைக்கின்றனர். இதனை, சிலர் சரி என கருதுகின்றனர். உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு உதவ வேண்டும்” என தெரிவித்துள்ளார்.