“2024 தேர்தலில் பாஜக தோற்றதா?” - மார்க் ஜூக்கர்பெர்க் கருத்துக்காக மன்னிப்புக் கேட்டது மெட்டா!
ஜூக்கர்பெர்க்கின் சர்ச்சை கருத்து
ஃபேஸ்புக்கின் தாய் அமைப்பான மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், பிரபல பாட் காஸ்டர் ஜோ ரோகனின் உடனான சமீபத்திய போட்காஸ்டில் பேசும் போது பல்வேறு விஷயங்கள் குறித்து தனது கருத்தினை தெரிவித்தார். அதில், “2024 தேர்தல்களின் ஆண்டாக இருந்தது. அப்போது உலகம் முழுவதும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தேர்தல்கள் நடைபெற்றன.
ஆனால், கோவிட் தொற்று-க்கு பிறகான சூழலை சமாளிக்க முடியாத காரணத்தால் மக்களிடம் இருந்த எதிர்ப்பால் எல்லா ஆளும் தரப்பினரும் தோல்வியை சந்தித்தனர். கோவிட் பிறகான சூழலை சமாளிப்பதில் அப்படியொரு சிக்கல் இருந்தது” என்று குறிப்பிட்டிருந்தார்.
மார்க் கருத்திற்கு மத்திய அமைச்சர் பதில்..
மார்க் ஜூக்கர் பெர்க்கின் பேச்சுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் பதில் கொடுத்து இருந்தார். அதாவது, ஜூக்கர்பெர்க் சொன்னது தகவல் ரீதியாக தவறானது என்றும் இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது என்றும் தெரிவித்து இருந்தார்.
அத்துடன், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 2024 நாடாளுமன்ற தேர்தலில் 64 கோடி பேர் வாக்களித்தனர். பிரதமர் மோடி தலைமையிலான என்.டி.ஏ மீதான தங்களது நம்பிக்கையை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்” என்று கூறினார்.
“சம்மன் அனுப்பப்படும்” - பாஜக எம்பி
தவறான தகவல் சொன்ன மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு சம்மன் அனுப்பப்படும் என்று பாஜக எம்பியும் நாராளுமன்ற தகவல் மற்றும் தொடர்புக் குழுவின் தலைவருமான நிஷிகாந்த் துபே கூறியிருந்தார்.
இதுதொடர்பாக நிஷிகாந்த் தன்னுடைய எக்ஸ் தளத்தில், “என்னுடைய குழு மெட்டா நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பும். தவறான தகவல் மூலம் ஜனநாயக நாட்டின் மாண்பு குழைக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவில் அப்படி நடக்கவில்லைதான்.. மெட்டா மன்னிப்பு!
இந்நிலையில், மார்க் ஜூக்கர்பெர்க் கருத்திற்காக மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. மெட்டா இந்தியாவின் துணைத் தலைவர் ஷிவ்நாத் துக்ராள் தன்னுடைய எக்ஸ் தளத்தில், “2024 ஆம் ஆண்டில் உலகில் பல நாடுகளில் நடைபெற்ற தேர்தல்களில் ஆளும் கட்சிகள் மீண்டும் தேர்வாகவில்லை என்ற மார்க்கின் கணிப்பு பல நாடுகளில் உண்மைதான்.
ஆனால், இந்தியாவில் அப்படி நடக்கவில்லை. இந்த தவறுக்காக நாங்கள் மன்னிப்பு கேட்க விரும்புகிறோம். அமெரிக்க பன்னாட்டு தொழில்நுட்பக் கூட்டமைப்பிற்கு இந்தியா முக்கியமான நாடாக தொடர்ந்து இருக்கும்” என்றார்.