டெல்டா ஃபோர்ஸ் |அமெரிக்காவின் அதிரடிப் படைப்பிரிவு.. ரகசிய வரலாறு!
பிணைக் கைதிகளை மீட்பது, பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களைக் கண்டறிந்து பிடிப்பது அல்லது அழிப்பது போன்ற அதிமுக்கியப் பணிகளே அமெரிக்காவின் டெல்டா போர்ஸின் முதன்மை இலக்காகும். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தப் படையின் பெரும்பாலான திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் ரகசியமாகவே வைக்கப்படுகின்றன.
1977இல் தொடங்கப்பட்ட இந்தப் படை, பிரிட்டிஷ் சிறப்புப் படையான SAS-இன் கட்டமைப்பை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. நவீன உளவு உபகரணங்கள், ட்ரோன்கள், மேம்பட்ட மின்னணுத் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவதில் டெல்டா படையினர் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். இதில் சாதாரண ராணுவ வீரர்கள் நேரடியாகச் சேர முடியாது. ஏற்கெனவே அனுபவம் வாய்ந்த 'கிரீன் பெரெட்ஸ்' அல்லது 'ரேஞ்சர்' படைப்பிரிவுகளில் இருந்து மட்டுமே வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். உடல் வலிமை மட்டுமின்றி, மிகக் கடினமான சூழலில் மன உறுதியுடன் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றைச் சோதித்த பிறகே வீரர்கள் இதில் சேர்க்கப்படுகின்றனர்.
ஆப்கானிஸ்தானின் தோரா போரா மலைப்பகுதிகளில் பின்லேடனைத் தேடும் வேட்டையைத் தொடங்கியது டெல்டா படையினரே. பின்லேடன் கொல்லப்பட்ட 'ஆபரேஷன் நெப்டியூன் ஸ்பியர்' நடவடிக்கையை நேவி சீல்ஸ் குழுவினரே முன்னின்று நடத்தினர். அந்தத் திட்டமிடலிலும், உளவுத் தகவல்களைச் சேகரிப்பதிலும், களத்தில் ஆதரவு வழங்குவதிலும் டெல்டா படை முக்கியப் பங்காற்றியது. 2019இல் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியை இலக்கு வைத்து வெற்றிகரமாக நடத்தப்பட்ட தாக்குதலிலும் டெல்டா படை முக்கியப் பங்காற்றியது. எதிரிக்குத் தான் ஆபத்தில் இருக்கிறோம் என்று சுதாரிப்பதற்கு முன்பே, அவர்களை டெல்டா படை சுற்றி வளைத்திருக்கும் என்று கூறப்படுவதுண்டு.

