சிரியா | இடைக்கால அதிபராக கிளர்ச்சிப் படைத் தலைவர் அறிவிப்பு!
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல் அசாத் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைமையிலான கிளர்ச்சிப் படை, கடந்த ஆண்டு இறுதியில் தீவிர தாக்குதல் மற்றும் அரசுப் பிடியில் இருந்த நகரங்களைக் கைப்பற்றியதன் வாயிலாக அவருடைய சாம்ராஜ்ஜியத்திற்கு முடிவுரை எழுதப்பட்டது.
அதிபர் பஷார் அசாத் ஆட்சி அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்திருந்த பல லட்சம் அகதிகள் மீண்டும் சிரியாவுக்கு திரும்பி வருவதுடன், அதைக் கொண்டாடியும் வருகின்றனர். பஷார் அசாத், ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார். அவருக்கு ரஷ்யா அரசாங்கம் அடைக்கலம் தந்துள்ளது.
அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் ஆளும் கட்சியாக மாறியது. மேலும், சிரியாவின் புதிய அரசின் பிரதமராக முகமது அல் பஷீர் தேர்வு செய்யப்பட்டார். அடுத்தாண்டு மார்ச் ஒன்றாம் தேதி வரை இடைக்கால அரசு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த இட்லிப் மாகாணத்தில், முன்னர் அது நடத்திய உள்ளூர் அரசாங்கத்தின் அதிகாரிகளைக் கொண்ட ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைத்துள்ளது.
இந்த நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைவர் அகமது அல்-ஷரா (அபு முகமது அல்-ஜோலானி), அந்த நாட்டின் இடைக்கால அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து புதிய அரசின் செய்தித் தொடா்பாளா் ஹஸன் அப்துல் கனி, சிரியாவில் முழுமையான ஆட்சி மாற்றம் நிகழும்வரை, நாட்டின் இடைக்கால அதிபராக அல்-ஷரா பொறுப்பு வகிப்பாா். முன்னாள் கிளா்ச்சிக் குழுக்கள் அனைத்தும் டமாஸ்கஸில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.