‘விண்மீனாய் தொலைந்த மகள், வெண்ணிலவாய் வந்தாளா’ - 20 வருடங்களுக்கு பின் பள்ளி தோழியை கரம்பிடித்த நபர்
பல அழகான காதல் கதைகளை நாம் கேட்டிருப்போம்... கேட்கும்போது வியப்பும், ஆச்சரியமும் தோன்றுவதென்னமோ வழக்கமான ஒன்றுதான். அப்படிதான் இந்த காதல் கதையும். ஆனால், மற்ற கதைகளை காட்டிலும் கூடுதல் சுவாரஸ்யமானது இது என்றே கூறலாம். ஏன் என அறிவோம்...
சைனா மார்னிங் என்ற ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின்படி,
சீனாவில் ஜெங் என்ற குடும்பப்பெயர் கொண்ட இளைஞர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஜனவரி 7 ஆம் தேதி சீனா, குவாங்டாங் மாகாணத்தில் உள்ள சாவோசோவில் திருமணம் நடந்துள்ளது. இவர் திருமணம் செய்து கொண்ட பெண் யார் என்பதில்தான் சுவாரஸ்யமே அடங்கியுள்ளது.
சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மணமகன் போல உடை அணிந்திருந்த ஜெங்கிற்கு ஜோடியாக (மணமகளாக) ஒரு சிறுமி நடித்துள்ளார். தற்போது அந்தப் பெண்ணையே ஜெங் திருமணம் செய்துள்ளார்.
பள்ளியில் சில வகுப்புகள் சேர்ந்து படித்த இருவரும், ஒரு கட்டத்தில் வெவ்வேறு பள்ளிகளுக்குச் சென்று படிப்பை தொடர்ந்துள்ளனர். பின் வாழ்க்கை பாதை மாறியுள்ளது இவர்களுக்கு.
இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டில், ஜெங் தனது பழைய பள்ளி நண்பர்கள் மற்றும் அவரது நாடகடத்தின் வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது தனக்கு ஜோடியாக நடித்திருந்த பெண்ணின் புகைப்படத்தை பார்த்தவுடன் ‘எப்படியாவது இப்பெண்ணை கண்டுபிடித்தே ஆக வேண்டும்’ என்று ஜெங்கிற்கு தோன்றியுள்ளது.
இதையடுத்து தீவிரமாக அவரை தேடியும் உள்ளார் ஜெங்... ஒரு கட்டத்தில் இருவரும் நேரில் சந்தித்துள்ளனர். நட்பு மீண்டும் மலர்ந்துள்ளது. இறுதியில் அந்த நட்பு காதலாக மாற இருவரும் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பள்ளிப்பருவத்தில் மணமகன் மணமகளாக வேடமணிந்த இருவர் 20 வருடங்களுக்கு பிறகு நிஜவாழ்க்கையிலும் தம்பதிகளாக காதலுடன் இணைந்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.