கேரள செவிலியர் நிமிஷாவின் மரண தண்டனை ரத்தா? உண்மை இதுதான்! உயிரிழந்த ஏமன் நபரின் சகோதரர் போட்ட பதிவு
ஏமனைச் சேர்ந்த தலால் அபு மஹதி என்பவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில், கேரளாவைச் சேர்ந்த இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு, அந்நாட்டு அரசு மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த மரண தண்டனையை தடுக்க இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில், கடந்த ஜூலை 16ஆம் தேதி, அந்த தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. எனினும் அதற்கு முன்பாக, கேரளாவைச் சேர்ந்த செல்வாக்குமிக்க சன்னி முஸ்லிம் தலைவர் காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியாரின் உத்தரவின் பேரில், ஏமனின் பிரபல அறிஞரும், சூஃபி முஸ்லிம் தலைவருமான ஷேக் ஹபீப் உமா் பின் ஹபீஸ், தலால் அபு மஹதி குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, நிமிஷாவின் தண்டனை தற்காலிமாக ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே தலால் அபு மஹதி சகோதரர் அப்தெல்ஃபத்தா மஹதி, நிமிஷா தரப்பின் இழப்பீடு பணத்தை ஏற்கப் போவதில்லை எனவும், அவருக்கு மரண தண்டனை உறுதி எனவும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, சமூகச் சேவகர் சாமுவேல் ஜெரோம் மீதே தலால் அபு மஹதி சகோதரர் அப்தெல்ஃபத்தா மஹதி புகார் தெரிவித்திருந்தார். ”நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற வசூலித்த பணத்தை சாமுவேல் ஜெரோம் தவறாகப் பயன்படுத்தினார். அவர் தனது வக்கிர செயலை நிறுத்தவில்லை என்றால் உண்மை வெளிப்படும்” என எச்சரித்திருந்தார். இதற்கிடையில், நிமிஷா பிரியா வழக்கில் இடைத்தரகராக இருந்த ஜெரோம் என்பவரை சர்வதேச செயல்பாட்டு கவுன்சில் வெளியேற்றியுள்ளது.
இந்த நிலையில், நிமிஷா பிரியாவின் மகளான மிஷெல், தன் தாயாரைக் காப்பாற்றக் கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்தச் சூழலில், கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அதிகாரிகள் முற்றிலுமாக ரத்து செய்துள்ளது போன்று இந்திய கிராண்ட் முப்தி காந்தபுரம் ஏபி அபுபக்கர் முஸ்லியார் அலுவலகத்தின் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. "முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. சனாவில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது" என்று முஸ்லியாரின் அலுவலகம் வெளியிட்டிருந்த அறிக்கையை செய்தி நிறுவனமான ANI மேற்கோளிட்டு காட்டியிருந்தது.
இருப்பினும், ஏமன் அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் கிடைக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் இதுதொடர்பாக அறிவிக்காத நிலையில், கொலை செய்யப்பட்ட மஹதியின் சகோதரர், அதுபோன்ற எந்த ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை என்றும், விரைவாக தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் ரத்தப் பணம் பெற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டிருக்கலாம் என்று இந்திய ஊடகங்களில் வெளியான தகவலையும் அப்துல் ஃபத்தா விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில், ”எங்கள் சகோதரர் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் எங்கள் குடும்பத்தினர் தொடர்ந்து போராடி வருகிறோம். அதில் எந்த தாமதமும் இல்லாமல் விரைவாக மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும். நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக கிராண்ட் முப்தி காந்தபுரம் அபுபக்கர் முஸ்லியார் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. மரண தண்டனையை ரத்து செய்யக் கோரிய ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருப்பதாக அந்த அறிக்கை கூறுவதில் உண்மையில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.